மதுரை: மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் கைகளால் மனிதக்கழிவுகளை அள்ளும் தொழிலாளர்கள் இல்லை என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இரு மாவட்ட ஆட்சியர்களும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை சேர்ந்த வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “இந்தியாவில் கையால் மலம் அள்ளும் தொழிலுக்கு தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் கடந்த 2013-ல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படாததால் 2015-ல் சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு குழு என்ற குழுவை உருவாக்கி மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு இந்த சிறப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.
மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் குறித்து இதுவரை முறையாக கணக்கெடுக்கப்படவில்லை. மலம் அள்ள தடை மற்றும் மறுவாழ்வு வழங்கும் சட்டத்தின்படி, மலம் அள்ளும் தொழிலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் மறுவாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
எங்களது ஒருங்கிணைப்பு குழுவின் மூலமாக மதுரை ஆட்சியரிடம் 84 மற்றும் விருதுநகர் ஆட்சியரிடம் 152 பேரின் பட்டியலை வழங்கினோம். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. பின்னர் மலம் அள்ளும் தொழிலாளர்களை அடையாளம் காண்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் எத்தனை பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பான விபரங்கள் இல்லை.
சிறப்பு சட்டம் 2013-ல் வந்தபோதும், அதன் பின்னரும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே சிறப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்த கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலனில்லை. எனவே மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு குழு தரப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் மதுரை, விருதுநகர் மாவட்ட கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கான அடையாள அட்டையை வழங்கவும், அவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை எடுக்கவும், கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களை கணக்கெடுக்க குழு அமைக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிட்டார். அரசு தரப்பில், “இரு மாவட்டத்திலும் கைகளால் மனிதக்கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் யாரும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, “மனிதர்களை கொண்டு மனித கழிவுகள் அகற்றப்படுவதில்லை என்றால், அது தொடர்பாக மதுரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறி விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.