மதுரை: மதுரையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள், காவல்துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யவேண்டும், இதற்கான சட்டம் கொண்டு வரவேண்டும், விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கான வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘சம்யுத்யா கிசான் மோர்ச்சா’ (ஐக்கிய விவசாயிகள் சங்கம்) விவசாயிகள் சங்கம் சார்பில், மதுரையில் ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இதற்காக பெரியார் பேருந்து நிலையம் அருகே ஐக்கிய விவசாயிகள் சங்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் திருப்புவனம் எல்.ஆதிமூலம் தலைமையில் ஏராளமான விவசாயிகள் திரண்டனர். ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்று ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்கள் மேற்கு நுழைவு வாயிலில் தடுப்பு வேலிகளை வைத்து போலீஸார் தடுத்தனர்.
அப்போது, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. ரயில் நிலையம் எதிரே சாலையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, எல்.ஆதிமூலம், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு மாநில கவுரவத் தலைவர் ராமன், தென்மண்டல தலைவர் மாணிக்கம், இளைஞரணி தலைவர் மேலூர் அருண் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். தமிழ்ச் சங்கம் சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக ஆதிமூலம் கூறுகையில், “விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல், விவசாய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம்” என்றார்.