ஜாபர் சாதிக் கருப்பு பணத்தை வெள்ளையாக்க பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தினார்: அண்ணாமலை குற்றச்சாட்டு


சென்னை: ஜாஃபர் சாதிக் போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜாஃபர் சாதிக்கின் நிறுவனமான Coalescence Ventures என்ற நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் ஒப்பந்ததாரர் நிறுவனமான Sri Appu Direct என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பொருள்களை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

ஜாஃபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை 2022 – 2023 காலகட்டத்தில், தனது Coalescence Ventures நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது, அமலாக்கத்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது. இதே காலகட்டத்தில்தான், Sri Appu Direct நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துடன் ஒப்பந்தம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்துக்கான பொருள்களை வழங்கியது, ஜாஃபர் சாதிக்கின் Coalescence Ventures நிறுவனம் ஆகும்.

குறிப்பிட்ட காலகட்டத்தில், திமுக நிர்வாகியாக இருந்த ஜாஃபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மறைமுகமாக உதவி செய்துள்ளதாகவே இதன் மூலம் தெரிய வருகிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

x