புதுச்சேரி: பத்திரங்கள் பதிவதில் காலதாமதம் ஆவதால் கடைகளை இன்று அடைத்து பத்திர எழுத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
புதுவையில் புதுவை, உழவர்கரை, பாகூர், வில்லியனுார், திருக்கனுார் ஆகிய 5 இடங்களில் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. பத்திரங்கள் நூற்றுக்கணக்கானவை பதிவாகி வந்த சூழலில் தற்போது குறைவான பத்திரங்கள் மட்டும் பதிவு செய்து காலதாமதம் செய்வதாக குற்றம்சாட்டி பத்திர எழுத்தர்கள் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து பத்திர எழுத்தர்கள் புதுச்சேரி சக்தி நகரில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு பிற பகுதிகளில் உள்ள பத்திர எழுத்தர்களும் வந்தனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், ”பத்திரம் பதிவு செய்வதில் காலதாதம் ஏற்படுகிறது. இணையதளம் இயங்கவில்லை என பத்திரங்கள் உடன் பதிவு செய்யப்படுவதில்லை. அலைக்கழிக்கப்படுவது அதிகரித்துள்ளது. புதிய பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் பல பதிவுகள் தாமதமாகிறது. திருமண பதிவுக்கு வந்தாலும் பல நாட்கள் இழுத்தடிக்கப் படுகின்றனர். அதிலும் தாமதம் ஏற்படுகிறது.
நாளொன்றுக்கு ஐந்து பதிவாளர் அலுவலகங்களிலும் நூற்றுக்கணக்கான பத்திரங்கள் முன்பு பதிவு செய்யப்பட்டன. தற்போது பத்து பத்திரங்கள் தான் பதிவாகிறது. இதனால் அரசுக்கு வருவாய் பாதிக்கப்படுகிறது. எங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டனர். இதையடுத்து ஆட்சியரை சந்தித்து மனு அளித்ததாக குறிப்பிட்டனர்.