சிதம்பரம்: ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது


கடலூர்: சிதம்பரத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 30-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும், விவசாயிகள் பெற்ற கடன் முழுமையும் தள்ளுபடி செய்து தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும், பஞ்சாப் கண்ணுரி பார்டரில் உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிருக்கு போராடி வரும் விவசாய சங்கத் தலைவர் ஜெக்ஜித் சிங் டல்லேவாலோடு பேச்சுவார்த்தை நடத்திட வலியுறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று (டிச.16) சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்ய விவசாயிகள் காந்தி சிலை அருகே திரண்டனர். பின்னர் ஊர்வலமாக ரயில் நிலையம் நோக்கி சென்றனர். தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களில் ஒருங்கிணைப்புக் குழு கடலூர் மாவட்ட செயலாளர் மணிக் கொல்லை ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பிச்சாவரம் கண்ணன், வெள்ளூர் லட்சுமிகாந்தன், வாண்டையார் இருப்பு அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். சிதம்பரம் டிஎஸ்பி லா மேக் தலைமையிலான போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் ரயில் நிலைய வாயிலில் விவசாயிகளை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனையடுத்து விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பினர். இதில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

x