பொன்னேரி: கடல் சீற்றத்தால் பழவேற்காடு முகத்துவாரத்தில் மீன்பிடிப் படகு கவிழ்ந்து, இராண்டாக உடைந்தது. அப்படகில் இருந்த 3 மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பழவேற்காடு பகுதியில் வங்காள விரிகுடா கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், பழவேற்காடு அருகே உள்ள வைரவன்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ என்ற மீனவர், சக மீனவர்களான ஜானகி ராமன், சுந்தர் ஆகியோருடன் இன்று அதிகாலை பழவேற்காடு பகுதியில் கடலில் மீன் பிடிக்க சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மீன்பிடி படகு பழவேற்காடு முகத்துவாரம் அருகே சென்ற போது, கடல் சீற்றம் காரணமாக அதிக உயரத்துக்கு எழும்பிய அலையில் சிக்கி, கவிழ்ந்தது. படகில் இருந்த, 80 கிலோ மீன் வலை உள்ளிட்ட மீன்பிடி பொருட்கள் மூழ்கிய நிலையில் இளங்கோ உள்ளிட்ட 3 மீனவர்கள், நல்வாய்ப்பாக உயிர் தப்பி கரை ஒதுங்கியுள்ளனர்.
அதே கடலில் கவிழ்ந்த படகு முகத்துவாரம் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிக்காக கொட்டப்பட்டுள்ள பாறைகள் மீது மோதி, இரண்டாக உடைந்து சிதறியுள்ளது. இதுகுறித்து திருப்பாலைவனம் போலீஸார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.