திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 11,12 ஆகிய தேதிகளில் பெய்தகன மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் பூண்டி ஏரிக்கு அதிகளவில் நீர் வந்து கொண்டிருந்ததால், ஏரியின் பாதுகாப்பு கருதி,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 12-ம் தேதி மதியம் முதல் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
தொடக்கத்தில் விநாடிக்கு ஆயிரம் கனஅடி என வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீரின் அளவு, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த 13-ம் தேதி காலை முதல் விநாடிக்கு 16,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாக மழை பெய்யாததால், நீர்வரத்து குறைந்துள்ளது.
எனவே பூண்டி ஏரியிலிருந்து நேற்று முன்தினம் மாலை முதல் விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு மற்றும் 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு நேற்று காலை நிலவரப்படி, 2,730 மில்லியன் கனஅடியாகவும், நீர்மட்டம் 33.77 அடியாகவும் உள்ளது. அது மட்டுமல்லாமல், நீர்வரத்து விநாடிக்கு 8,560 கன அடியாக உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி: தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வந்த நிலையில் அதன் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால் உபரிநீர் திறப்பு 6 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது 3 நாட்களாக மழை இல்லாத நிலையில் நீர்வரத்தும் 2 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
இதனால் உபரிநீர் திறக்கப்படுவது தற்போது 3000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.40 அடியாக உள்ளது. ஏரியின் நீர்மட்டத்தை 21 அடி அளவிலேயே வைத்து கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதேபோல், புழல் ஏரியிலிருந்து 13-ம் தேதி காலைமுதல் விநாடிக்கு 500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
மழையில்லாததால் புழல் ஏரிக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது. ஆனால், நீர் இருப்பு அதிகமாக உள்ளது. ஆகவே, நேற்று முன்தினம் இரவு புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 21.20 அடிஉயரம் கொண்ட புழல் ஏரியில் நேற்று காலை நிலவரப்படி 2,920 மில்லியன் கன அடி நீர் இருப்பும், 19.54 அடி நீர் மட்டமும் உள்ளது.
ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 653 கன அடியாக உள்ளது. கடந்த 13-ம் தேதி காலை நிலவரப்படி, ஆந்திர மாநிலம்-பிச்சாட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 5,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. படிப்படியாக குறைக்கப்பட்டு வந்த அந்தளவு நேற்று இரவு விநாடிக்கு 800 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.