சென்னை: திமுக ஆட்சி மீதான அதிமுகவின் கண்டன தீர்மானங்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில், திமுக ஆட்சி மீது சிலகண்டன தீர்மானங்களை நிறைவேற்றி, அதன்மூலம் களங்கம் சுமத்தலாம் என கற்பனை கோட்டை கட்டியிருக்கிறார் பழனிசாமி.
இந்திய வானிலை ஆய்வு மையத்தாலேயேகூட சரிவர கணிக்க முடியாத ஃபெஞ்சல் புயலால் எதிர்பார்க்காத இடங்களில், எதிர்பார்க்காத அளவு அதிகனமழை பெய்தபோதும், முதல்வர் உத்தரவின்பேரில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், தமிழக மக்களுக்கு பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
ஏமாந்த பழனிசாமி: கடந்த கால அதிமுக ஆட்சியில் புயலின்போது உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்பட்டதுபோல தற்போதைய திமுக ஆட்சியிலும் நடக்கும் என எண்ணி ஏமாந்துபோன பழனிசாமி, தற்போது கண்டன தீர்மானமாவது நிறைவேற்றுவோம் என நிறைவேற்றி இருக்கிறார். டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி கொடுக்க காரணமே அதிமுக ஆட்சிதான். 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மதுரை மேலூர் பகுதியில் இரவோடு இரவாக நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில்தான் அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து ஏலம் விட்டுள்ளது.
வலிக்காமல் வலியுறுத்தல்: சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்துவரும் அதிமுக, முஸ்லிம் கைதிகள் விடுவிப்பு பற்றி பேசுவது வேடிக்கை. தற்போதும்கூட மறைமுகமாக மதவாத பாஜகவோடு கள்ள உறவில்கைகோத்து இருக்கும் பழனிசாமி, மத்திய அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து ஒரு வார்த்தைகூட உச்சரிக்கவில்லை.
தீர்மானங்களில்கூட பாஜகவுக்கு வலிக்காத வகையில் வலியுறுத்தல். ஆனால், சிறப்பாக செயல்படும் தமிழக அரசுக்கு கண்டனமாம். சிறுபான்மை மக்களின் அரணாக நிற்கும் திமுக ஆட்சியை குறை கூறினால் மக்கள் நம்பமாட்டார்கள். உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதன் மூலம் முதல்வர் பல்வேறு நாடுகளுக்கு நேரடியாக சென்று முதலீடுகளை திரட்டியதன் விளைவாக தமிழகத்தில் பெரும் நிறுவனங்கள் தொழில் தொடங்கி, வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
அதன் காரணமாக நாட்டிலேயே அதிக வேலைவாய்ப்பை உருவாக்கி, வளர்ச்சி பாதையில் முன்னணி மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது. பெண்கள் முன்னேற்றத்துக்காக முதல்வர் மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளால், பெண்கள் வேலைக்கு செல்லும் விகிதத்திலும், சுயசார்பு நிலையிலும் நாட்டிலேயே தமிழகம்தான் முதலாவதாக உள்ளது.
தமிழக மக்களின் நலனே முக்கியம் என முதல்வர் தலைமையில்
சிறப்பாக நடந்துவரும் திமுக ஆட்சி மீது அள்ளிவிடும் அதிமுகவின் கண்துடைப்பு கண்டன கதைகளை தமிழக மக்கள் துளியும் நம்பப்போவது இல்லை. பழனிசாமியின் துரோகத்தையும் மறக்கப்போவது இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.