விசிகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியில் இருந்து விலகுவதாக திருமாவளவனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். எனது அரசியல் பயணம் தொடரும் எனவும் அறிவித்துள்ளார்.
இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம், வாய்ஸ் ஆப் காமன்ஸ் அமைப்பு உள்ளிட்டவற்றின் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஆதவ் அர்ஜுனா, ஜன.26-ம் தேதி, திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே நடைபெற்ற விசிகவின் மாநாட்டில் திருமாவளவன் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். தனது தேர்தல் வியூக நிறுவனத்தால் விசிகவின் அனைத்து செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்த காரணத்தால் ஒரு மாதத்துக்குள்ளாகவே அவருக்கு துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இதற்கிடையே, விசிக இன்றி வடமாவட்டங்களில் திமுகவால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பன போன்ற அவரது கருத்துக்கள் விசிகவுக்குள் வெடிக்கத் தொடங்கியது. மேலும், அம்பேத்கர் குறித்து தனது நிறுவனம் உருவாக்கிய நூல் வெளியீட்டு விழாவில் திமுகவை மறைமுகமாக ஆதவ் கடுமையாக விமர்சித்தார். இதன் காரணமாக அவர் 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், விழாவில் பங்கேற்கக் கூடாது என திருமாவளவனுக்கு திமுக அழுத்தம் கொடுத்ததாக குற்றம்சாட்டினார்.
இதற்கு நேற்று பதிலளித்த திருமாவளவன், "விழாவில் பங்கேற்கக் கூடாது என யாரும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. மீண்டும் முரண்பாடான கருத்தை சொல்வதன் மூலம் ஏதோ ஒரு செயல்திட்டம் அவருக்கு (ஆதவ்) இருக்கிறது என்பதை உணர முடிகிறது" என தெரிவித்திருந்தார்.
இதற்கான பதிலுடன் தனது விலகல் கடிதத்தை நேற்று விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜுனா அனுப்பியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய கட்டமைப்புகளுக்கு எதிரான செயல்திட்டங்களைக் கொள்கைரீதியாக வகுத்து என்னைச் செயற்பட வைத்த விசிகவுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். விசிகவின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயல்திட்டங்களும் இல்லை. மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என் கருத்துகள் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை.
சட்டமேதை அம்பேத்கர் கூறியதை போல “அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புங்கள்” என்ற அடிப்படையில் சாதி ஒழிப்பு உள்ளிட்டவற்றுக்கான அரசியல் போராட்டங்களில் உங்களுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன். என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விசிகவில் இருந்து விலகுகிறேன். மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
விசிகவை உடைக்க முயற்சி: விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கூறும்போது, "இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையிலும் தலைமையின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வேலையை தொடர்ந்து ஆதவ் செய்தார். அவரை இயக்குவோர் சொல்லியபடி, விசிக அல்லது திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் போன்ற செயல்திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதை உணர்ந்து வெளியேறியுள்ளார். எனினும், அவர் வெளியேறியது வருத்தம் தான்" என்றார்.