புழல் சிறையில் கைதிக்கு கஞ்சா விநியோகம்: சிறை தலைமை காவலர் பணியிடை நீக்கம்


செங்குன்றம்: புழல் மத்திய சிறையில் கைதிக்கு கஞ்சா விநியோகம் செய்தது தொடர்பாக சிறை தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சென்னை- புழல் மத்திய சிறையில் அடிக்கடை கைதிகளிடம் இருந்து கஞ்சா, மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிறை தலைமை காவலர் துரையரசன் என்பவர், குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி சிறையின் விசாரணை பிரிவில் அடைக்கப்பட்டுள்ள திருப்பூர் பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவர் மூலம் புழல் சிறை-விசாரணை பிரிவில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா பொட்டலத்தை விநியோகித்து வருவதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில், சிறைத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தலைமை சிறை காவலர் துரையரசன், கைதி சுகுமார் மூலம், போதை பொருள் வழக்கில் கைதான, சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த மெர்வின் விஜய் என்கிற லாசர் விஜியிடம் கஞ்சா விநியோகம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, மெர்வின் விஜயிடம் இருந்து சிறை அதிகாரிகள், 48 கிராம் கஞ்சாவை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, சிறை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் புழல் போலீஸார், தலைமை சிறை காவலர் துரையரசன், கைதிகள் சுகுமார், மெர்வின் விஜய் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில், கைதிக்கு கஞ்சா விநியோகம் செய்தது தொடர்பாக தலைமை சிறை காவலர் துரையரசனை, சிறைத் துறை உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

சிறை காவலர் மீது தாக்குதல்: போதை பொருள் வழக்கில் கைதாகி புழல் சிறையின் விசாரணை பிரிவில் அடைக்கப்பட்டுள்ள சென்னை, புளியந்தோப்பைச் சேர்ந்த கார்த்திக்கும், மற்றொரு கைதிக்கும் சிறை வளாகத்தில் துணிகளை துவைத்து காயப்போடுவது தொடர்பாக வீண் தகராறு ஏற்பட்டது. அந்த தகராறு முற்றியதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை சிறை காவலர் சமாதானம் செய்துள்ளார். இதனால், கோபமடைந்த கார்த்திக், சிறை காவலர் பிரபாகரனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புழல் போலீஸார், கைதி கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

x