உதகையில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம்: கண்டுரசித்த சுற்றுலா பயணிகள்!


உதகை: உதகையில் கிறிஸ்த்தவ சாட்சிய பேரணியில் வந்த கிறிஸ்துமஸ் தாத்தாவை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் உதகையில் கிறிஸ்துவ சாட்சிய பேரணி நடைபெறுவது வழக்கம். குறிப்பாக குழந்தைகளை மகிழ்விக்கும் நோக்கிலும் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்காகவும் கிறிஸ்து பிறப்பை அறிவிக்க இப்பேரணி உதகை நகரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சாட்சிய பேரணி இன்று நடைப்பெற்றது. இப்பேரணி கத்தோலிக்க மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தொடங்கி வைத்தார். மேலும் இப்பேரணி உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தோமையர் ஆலயத்தில் தொடங்கி மத்திய பேருந்து நிலையம், லோயர் பஜார், நகராட்சி சந்தை, கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் உட்பட நகரின் முக்கிய வீதி வழியாக வந்தது.

இந்த ஊர்வலத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து நகர வீதிகளில் உல வந்த கிறிஸ்துமஸ் தாத்தாவை குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் கிருஸ்து பிறப்பை தத்ரூபமாக உணர்த்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர் வேடமிட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பாடல்களும் இசைக்கப்பட்டது.

இந்த பேரணியானது உதகை திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியில் 600க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் பேரழிவுகளில் இருந்து மக்களை பாதுகாக்கவும் அனைத்தும் மக்களும் நலமுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

x