தேனி: பருவமழை பாதிப்பு குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் ஆய்வு


தேனி: தேனி மாவட்டத்தில் பருவமழை குறித்து ஆய்வு நடத்திய அமைச்சர் ஐ.பெரியசாமி, மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களையும் வழங்கினார்.

வடகிழக்கு பருவமழை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தேனி ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆர்.லில்லி, ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன், ஆ.மகாராஜன், கே.எஸ்.சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் பேசியதாவது: ''தொடர்மழையால் முல்லைப் பெரியாறு அணை சுமார் 10அடி வரை உயர்ந்துள்ளது. மேலும் வைகை உள்ளிட்ட பல்வேறு அணைகளின் நீர்மட்டமும் வெகுவாய் உயர்ந்துள்ளது. மலைச்சாலைகளில் மண்,பாறை சரிவுகளை சரி செய்ய 24 மணிநேரமும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடுதல் மழை பெய்தாலும் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்கவும், உணவு வழங்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டுவருகிறது.'' இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக வைகைஅணையில் ஆய்வு நடத்தி நீர்வரத்து, கொள்ளளவு குறித்து கேட்டறிந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் பாலசண்முகம் உட்பட பலர் உடனிருந்தனர்.

x