சிதம்பரம் நடராஜர் கோயில் 5 தேர்களுக்கும் ரூ.6 லட்சத்தில் புதிய வட கயிறு: பக்தர் காணிக்கை


கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் தேர்களுக்கு ரூ.6 லட்சத்தில் புதிய வட கயிறுகள் பக்தரான ஓட்டல் உரிமையாளர் வழங்கியுள்ளார். இது கோவில் பொது தீட்சிதர்களிடம் வழங்கப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ள 5 தேர்களுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய வட கயிறுகள், மேள, தாளம் முழங்கிட நான்கு வீதிகளிலும் வடகயிறு ஊர்வலமாக எடுத்துக் செல்லப்பட்டு பக்தரான ஓட்டல் உரிமையாளர் சார்பில் கோயில் தீட்சிதர்களிடம் வழங்கப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுக்கு இருமுறை தரிசன திருவிழான்போது தேரோட்டம் நடைபெறும். அப்போது நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனியாக ஐந்து தேர்களில் வலம் வரும். இந்நிலையில் கோயிலின் தேரோட்டத்திற்கு பயன்படுத்தப்படும் வடக்கயிறுகள் பழமையானதால் புதிதாக வடக்கயிற்றை பக்தர் ஒருவர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

சிதம்பரத்தை சேர்ந்த பக்தராக தனியார் ஓட்டல் உரிமையாளரான மோகன் என்பவர் ரூ.6 லட்சம் செலவில் இந்த புதிய தேர்வடக்கயிறை வழங்கினார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இந்த தேர் வடகயிறுகள் 40 டன் தேங்காய் நாரில் 19 இன்ச் சுற்றளவில் 460 அடி நீளத்துக்கு 2 கயிறும், 3 கயிறுகள் 180 அடி நீளத்தில் செய்து முடிக்கப்பட்டது.

இதையடுத்து கோயிலில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று(டிச.15) நடந்தது. லாரியில் கொண்டு வரப்பட்ட தேர்களின் வட கயிறுகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் தனித்தனியாக தேர் வட கயறுகள் வாகனத்தில் வைக்கப்பட்டு சிதம்பரம் நகரின் நான்கு வீதிகளையும் மேள, தாள முழங்க வலம் வந்தது. அப்போது பக்தர்கள் சிவ வாத்தியங்களை இசைத்தபடியே ஊர்வலத்தில் சென்றனர்.

பின்னர் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களிடம் தேர் வடகயிறுகள் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து 5 வட கயிறுகளும் எடுத்துச் செல்லப்பட்டு கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.அடுத்த மாதம் 12ம் தேதி நடராஜர் கோயில் தேரோட்ட விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

x