9 ஆண்டுகளாக மறுக்கப்படும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு: ரூ.3,028 கோடி தேவைப்படும் என போக்குவரத்துத் துறை கணக்கீடு


சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி உயர்வு வழங்க ரூ.3028 கோடி தேவைப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: ''நிதி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள பல்வேறு வழக்குகளில் அகவிலைப்படி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக அகவிலைப்படி உயர்வு வழங்க தேவையான தொகை குறித்து கணக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, நடப்பாண்டு அக்டோபர் மாதம் வரையிலான கால கட்டத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்க ரூ.3,028.75 கோடி தேவைப்படுகிறது. மேலும், மாதந்தோறும் அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டுமானால் கூடுதலாக ரூ.73.42 கோடி தேவைப்படுகிறது. இதனை வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும்.'' இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தொழிற்சங்கத்தினர் கூறும்போது, "அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கு எதிரான அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் நீதிமன்றத்தால் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்யப்படுகின்றன. எனவே, காலம் தாழ்த்தாமல் குறைவாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களின் நலன் கருதி அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு முன்வர வேண்டும்" என்றனர்.

x