திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் சுவாமி தூக்கும் பணியில் இஸ்லாமியர் பெயர் அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட பாஸ், சமூக வலைத்தளத்தில் வெளியாகி ஏற்படுத்திய சர்ச்சைக்கு, பெயரில் ஏற்பட்ட பிழை என ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. மூலவர் சந்நிதியில் பரணி தீபமும் மற்றும் 2,668 அடி உயரத் திரு அண்ணாமலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டன. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பல நிலைகளில் ‘பாஸ்’ அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அம்மன் தூக்கும் பணியாளர் பெயரில், ஷாருக்கான் என்ற இஸ்லாமியர் பெயர், புகைப்படத்துடன் இடம்பெற்றிருந்தது, சமூக வலைத்தளத்தில் வைரலானது. இவர், கடந்த 4-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை, அண்ணாமலையார் கோயில் உள்ளே சென்று வரும் வகையில், கோயில் நிர்வாகம் மூலம் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்து கோயிலில் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு எப்படி பாஸ் வழங்கப்பட்டது, இந்துக்கள் யாரும் இல்லையா எனக் கேள்வி எழுப்பப்பட்டன.
இந்நிலையில், பாஸ் அச்சிடும்போது, பெயரில் தவறு நடைபெற்றுள்ளது எனத் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், கடந்தாண்டு வழங்கப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய சுவாமி தூக்கும் பணியாளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை அடையாளங்களுடன் விளக்கமளித்துள்ளார்.
மேலும், “திருவண்ணாமலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், “கார்த்திகை தீபத் திருவிழாவில் அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தூக்கும் பணியில் இஸ்லாமியர் பெயர் உள்ளது. இந்துக்கள் யாரும் இல்லையா? என ஷாருக்கான் என்ற அடையாள அட்டை சமூக வலைத்தளத்தில் பரவுகிறது. இது வதந்தியாகும்.
முற்றிலும் தவறான தகவலாகும். அடையாள அட்டையில் உள்ள நபரின் பெயர் ஷாருக்கான் அல்ல, ஷாருகேஷ். இவரது தந்தையின் பெயர் சரவணன். கடந்தாண்டு வழங்கப்பட்ட அடையாள அட்டையில் ஷாருகேஷ் என அச்சிடப்பட்டுள்ளது. 2024-ல் வழங்கப்பட்ட அட்டையில் பெயர் பிழையால் தவறான தகவல் பரப்பப்படுகிறது. வதந்தியைப் பரப்பாதீர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயரில் ஏற்பட்ட பிழையால் தவறு நடைபெற்றுள்ளது எனத் தெரிவித்து சர்ச்சைக்கு ஆட்சியர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதேநேரத்தில், இந்த தவற்றுக்குக் காரணமானவர் மீதும், அடையாள அட்டை பெயரில் உள்ள பிழையைக் கவனிக்காமல் வழங்கியவர் மீதும் எடுக்கப்படும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துத் தெரிவிக்கப்படவில்லை.
கார்த்திகை தீபத் திருவிழாவில் பாஸ் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு பங்கேற்ற ஆய்வுக் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விநியோகம் செய்யப்பட்ட பாஸ் எண்ணிக்கையை விடக் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் வருகிறார்கள் என்றால் என்ன? அர்த்தம் என அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பி இருந்தார்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்து சமய அறநிலையத் துறை மூலம் என்னென்ன பிரிவுகள் மற்றும் பணிகளுக்கு எத்தனை பாஸ் அச்சிடப்பட்டது என வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எனவே, இஸ்லாமியர் பெயரை அச்சிட்டு வழங்கி, தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியவர் மற்றும் பாஸ் அச்சிட்டு வழங்கும் பொறுப்பில் கவனக்குறைவாகச் செயல்பட்டவர் மீது நடவடிக்கை எடுத்தும், பாஸ் விநியோகம் குறித்து முழுமையாக ஆட்சியர் ஆய்வு செய்து வெளிப்படையாகப் பக்தர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.