தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாளை முதல் டிசம்பர் 18ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களிலும், வடகடலோர மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ள நிலையில் அடுத்து 24 மணி நேரத்தில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 16ம் தேதி கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 17ம் தேதி கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 18ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.