ஆசிரியர் எண்ணிக்கையை 8 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நியமிக்கப்படுவதற்காக 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 மாதங்களாகியும் அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அதுவரை தற்காலிக ஏற்பாடாக 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட 14 ஆயிரத்து 19 ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் நியமிக்கப்படவில்லை. இதற்கிடையே, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கும் அதிகமாகிவிட்டது.

அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களின் பணிக்காலம் பிப்ரவரி மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, இதைத் தடுக்க கடந்த பிப்.4-ம் தேதி நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர் களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக உயர்த்த வேண்டும். அவர்களுக்கு புத்தாண்டுக்குள் பணி நியமன ஆணைகளை அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x