அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடும்போது முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்


கோப்புப்படம்

சென்னை: தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ததால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால்,மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு கடந்த 13-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று ஆய்வு மேற்கொண்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுடன் காணொலி மூலமாக, மழை பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்தும் கேட்டறிந்து தேவையான அறிவுரைகளை வழங்கினார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், “தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், அணைகளின் நீர் இருப்பை கண்காணிக்க வேண்டும். அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடும்போது பொது மக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் முன்னதாகவே தங்க வைக்கவேண்டும். கனமழையால் ஏற்பட்ட பயிர் சேத விவரங்கள் உட்பட அனைத்து சேத விவரங்களையும் துரிதமாக கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.

ஏற்கெனவே, முதல்வர் உத்தரவின்படி, அமைச்சர்கள் கே.என். நேரு.சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்தி வருகின்றனர். மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள, ஐஏஎஸ் நிலையிலான கண்காணிப்பு அலுவலர்களும் தொடர்புடைய மாவட்டங்களில் முகாமிட்டு மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

மீட்புப் பணியில் மாவட்ட நிர்வாகத்துக்கு உதவும் வகையில் திருநெல்வேலி, தென்காசிமற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தலா ஒரு குழு வீதம், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. இதுமட்டுமன்றி, தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழு திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அந்தமான் கடல் பகுதியில் 15-ம் தேதி (இன்று) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக, தமிழகத்தில் ஏற்படவுள்ள மழை குறித்தும் முதல்வர் விவாதித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்தக் கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன். வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, நீர்வளத்துறை செயலாளர் க.மணிவாசன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் பெ.அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

x