ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 75.
அவரது மறைவு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்துக்கு பேரிழப்பு. கட்சியில் தன்மானத் தலைவராக திகழ்ந்தவர். எதையும் அச்சமில்லாமல் எதிர்கொள்வார். வெளிப்படையாகப் பேசுபவர். அவரது இழப்பு அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், தனிப்பட்ட முறையில் எனக்கு ஈடு செய்ய முடியாது இழப்பு” என்றார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம்: பெரியாரின் பேரனான ஈவிகேஎஸ் இளங்கோவனின் தந்தை ஈ.வே.கி.சம்பத், தாயார் சுலோச்சனா சம்பத் ஆவர். காங்கிரஸ் மாணவரணி செயலாளர், ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஈரோடு நகர காங்கிரஸ் தலைவர், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்த இளங்கோவன், 2000-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை வகித்தார். பின்னர் 2003-ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக பதவி வகித்தார். இரண்டாவது முறையாக 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவியை வகித்தார்.
1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004-ம் ஆண்டு கோபி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சராக பதவி வகித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா கடந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு 66 ஆயிரத்து 233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக காங். துக்கம் அனுசரிப்பு; ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்கு: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகிற வகையில், ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பதோடு, தமிழகம் முழுவதும் தங்கள் கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை நந்தம்பாக்கம் அருகில், அவர் வாழ்ந்த மணப்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை முகலிவாக்கம் எல் அண்ட் டி காலனி பகுதியில் அமைந்துள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி: ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் உடன் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, கோ.வி.செழியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
“மனதில் பட்டதைப் பேசும் பண்பாளர்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தந்தை பெரியார், சொல்லின் செல்வர் ஈவிகே சம்பத் என மிகப் பெரும் அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த நண்பர் இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர் என்று பல்வேறு நிலைகளில் பொது வாழ்க்கைப் பணிகளைத் திறம்பட ஆற்றியவர். எப்போதும் தன் மனதில் பட்டதைப் பேசிவிடக் கூடிய பண்புக்குச் சொந்தக்காரர்.
அவரது அன்பு மகனும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான திருமகன் ஈவெரா இழந்ததில் இருந்தே நண்பர் இளங்கோவன் மனதளவில் மிகவும் உடைந்து போயிருந்தார். எனினும், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று, தன் கவலைகளை மீறி மக்கள் பணியாற்றி வந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கார்கே, ராகுல் காந்தி புகழஞ்சலி: “ஒரு நேர்மையான மற்றும் தைரியம் மிக்க தலைவராக ஒருமித்த கருத்துகளை உருவாக்குபவராக அவர் இருந்தார். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் தந்தை பெரியாரின் முற்போக்கான கொள்கைகளை நிலைநிறுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்” என்று இளங்கோவன் மறைவுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
“துணிச்சலான, கொள்கைப் பிடிப்புள்ள தலைவராக இருந்த இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் மதிப்புகள் மற்றும் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கான உறுதியான ஆதரவாளராக இருந்தார். தமிழக மக்களுக்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவைகள் என்றென்றும் உத்வேகம் அளிக்கும்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தலைவர்கள் புகழஞ்சலி: இளவங்கோவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இரா. முத்தரசன், “மத்திய அரசில் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக பணியாற்றியவர். அந்த நேரத்தில் ஜவுளித் துறை நெருக்கடிக்கு காரணமாக இருந்த சென்வாட் வரி நீக்க பாடுபட்டவர். பழனி - சாம்ராஜ் நகர் ரயில் பாதை அமைப்பதற்கான ஆரம்ப நிலை பணிகளை தொடக்கி வைத்தவர்” என்று நினைவு கூர்ந்துள்ளார்.
“ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது மனதில் பட்டதை தைரியமாக பேசக்கூடியவர். தொண்டர்களுக்கு சோர்வு ஏற்படும் போதெல்லாம் அவர்களுக்கு, ஊக்கமளித்து உற்சாகப்படுத்துபவர். அவரது இழப்பு தமிழக காங்கிரஸ் கட்சிக்கும், தமிழகத்துக்கும் பேரிழப்பாகும்” என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். “தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத பங்களிப்பு செய்த தலைவர்களில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் ஒருவர்” என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
“காங்கிரஸ் இயக்கத்தின் சுயமரியாதை தலைவர் என்று சொல்லத்தக்க அளவுக்கு காங்கிரஸ் கட்சியில் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக் கொண்டு, தமிழகத்தில் கட்சியை வழிநடத்துகின்ற தலைவராக உயர்ந்தவர். தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வலிமையோடு எடுத்துச் செல்வதற்கு எவருக்கும் அஞ்சாமல் கருத்துகளை முன்வைத்த சிறப்பு அவருக்கு உண்டு” என்று வைகோ புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
“சிறு வயதிலிருந்தே அரசியல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். முன்னாள் மத்திய அமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி வந்தார்” என்று எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவரம் என்ன? - தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு - வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் டிசம்பர் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்ட வெள்ள பாதிப்பு குறித்து ஆலோசனை: தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருவதையொட்டி அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது அணைகளின் நீர் இருப்பை கண்காணிக்க வேண்டும் என்றும் அணைகளில் இருந்து நீரினை திறந்து விடும் போது பொது மக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.
தென் மாவட்டங்களில் மழையால் பாதிப்பு: தென்காசி மாவட்டத்தில் மூன்றாவது சனிக்கிழமையும் பரவலாக மழை நீடித்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு நீடித்தது. இதேபோல், நெல்லை மாவட்டத்தில் நீடிக்கும் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா’ - ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா திங்கள்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் அதனை தாக்கல் செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.