தனி எழுத்து நடையை கொண்டது தமிழ்: கரிசல் இலக்கிய விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்


சிவகாசி: அசோகரின் பிராமி எழுத்துகளில் இருந்து தான் தமிழ் வந்தது என்ற கோட்பாட்டை உடைத்து, தனக்கென்று தனி மொழி நடை, எழுத்து நடையை கொண்டிருக்கிற மொழி தமிழ் என்பதை தொல்லியல் ஆய்வுகள் அறிவியல் பூர்வீகமாக நிரூபித்துள்ளது என சிவகாசியில் நடந்த கரிசல் இலக்கிய திருவிழாவில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சிவகாசியில் மாவட்டம் நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கிய கழகம் இணைந்து நடத்தும் இரண்டாவது கரிசல் திருவிழா இன்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். கரிசல் இலக்கியக் கழகச் செயலாளர் மருத்துவர் அறம் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பேசுகையில், “உலகம் முழுவதும் வட்டார இலக்கியத்திற்கு என்று தனி மதிப்பு உள்ளது. எளிய மக்களின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்வது வட்டார இலக்கியங்கள் தான். தமிழில் கடந்த 70 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதப்பட்டு வரும் வட்டார இலக்கியம் கரிசல் இலக்கியம். மகாகவி பாரதியார் தொடங்கி இன்று வரை தொடர்ந்து கரிசல் இலக்கியம் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. இதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்காகவே இந்த விழா நடத்தப்படுகிறது” என்றார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “ஆட்சித் திறனையும், இலக்கிய ஆற்றலையும் இரு கண்களாக பாவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு பணிகள் இருந்தாலும், இலக்கிய சூழலை மறந்துவிடாமல், கரிசல் இலக்கிய திருவிழா நடத்துவது பாராட்டுவதற்குரியது.
இலக்கண வளர்ச்சியும், இலக்கிய செழுமையும் கொண்ட மொழி தமிழ். அசோகர் காலத்திற்கு முன் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தனக்கென்று தனி எழுத்து முறையை பெற்ற இனம் தமிழ் இனம். அசோகரின் பிராமி எழுத்துகளில் இருந்து தான் தமிழ் வந்தது என்ற கோட்பாட்டை உடைத்து, தனக்கென்று தனி மொழி நடை, எழுத்து நடையை கொண்டிருக்கிற மொழி தமிழ் என்பதை இன்று தொல்லியல் ஆய்வுகள் அறிவியல் பூர்வீகமாக சொல்லியிருக்கிறது. அறிஞர்கள் மட்டுமின்றி மண் பாண்டம் செய்யும் தொழிலாளி கூட எழுத்தறிவு பெற்றிருந்த சமூகம் தமிழ் சமூகம் மட்டுமே.

கீழடி, சிவகளை என தொல்லியல் ஆய்வில் நாம் எங்கு சென்று பார்த்தாலும் ஆதனும், சாத்தனும் அங்கு இருக்கிறார்கள். மொழியின் வளர்ச்சியில் சங்க இலக்கியம், 8-ம் நூற்றாண்டில் பக்தி இலக்கியம் என உருமாறி இன்று மரபுக்கவிதை, புதுக்கவிதை என பல்வேறு மாற்றங்களை இலக்கியங்கள் பெற்று வந்தாலும், அடிப்படையில் நிலம் சார்ந்த இலக்கியங்களுக்கு தனி இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. அதுதான் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை திணைகளாக பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பல இலக்கியங்கள் உருவாகி இருக்கிறது.

அந்த வகையில் நம்முடைய கரிசல் மண்ணில் உருவாகி இருக்கக்கூடிய இலக்கிய மரபை, பாரதி தொடங்கி இன்று வரை கொண்டாடி வருகிறோம். கரிசல் மண்ணில் இலக்கியம் மட்டுமல்ல ஓவியம், தொல்லியல், செப்பேடு, வேளாண் கருவிகள், தொழில் வளர்ச்சி என அனைத்துமே உள்ளது. இன்று உள்நாட்டு உற்பத்தி, வெளிநாட்டு முதலீடுகள் பற்றி பேசி வருகையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே பட்டாசு, தீப்பட்டி, அச்சு என தொழில்களை உருவாக்கி வெற்றி கண்டது கரிசல் பூமி.

தமிழக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் இலக்கிய விழாக்களுக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களுக்கு கனவு இல்லம், சென்னையில் மட்டுமே நடந்து வந்த புத்தகத் திருவிழாவை மாவட்டம் தோறும் நடத்துவது, நதிக்கரை நாகரிகத்தை நினைவூட்டும் வகையில் பொருநை, வைகை, காவேரி இலக்கியத் திருவிழாக்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக நிலம் சார்ந்த விழாவாக கரிசல் இலக்கிய விழா கொண்டாடப்படுகிறது” இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் கரிசல் கதைகள், கரிசல் கவிதைகள், கரிசல் சொலவடைகள், விடுகதைகள் நாட்டார் கதைகள் ஆகிய 3 நூல்கள் வெளியிடப்பட்டது.

சிலப்பதிகாரம் முற்றோதுதல் செய்த அரசு பள்ளி மாணவிகள் வீரசெல்வி, சந்தனவேணி இருவருக்கு அமெரிக்காவை சேர்ந்த தமிழ் இலக்கிய ஆர்வலர் வைதேகி கெர்பார்ட் வழக்கும் ஊக்கத்தொகையை அமைச்சர் தங்கம் தென்னரசு மாணவிகளுக்கு வழங்கி பாராட்டினார். கரிசல் இலக்கிய திருவிழாவில் முதல் நாள் அமர்வில் கரிசல் இலக்கியம், இரண்டாம் நாள் தற்கால இலக்கியம் குறித்த நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கரிசல் இலக்கியம், ஓவியம், இசை, தொழில் சார்ந்த புகைப்பட கண்காட்சி இடம்பெற்றுள்ளது. இதில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், சொ.தர்மன் உள்ளிட்ட கரிசல் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

x