“கரிசல் இலக்கியத்தின் மகத்துவம் இதுதான்” - கனிமொழி எம்.பி பேச்சு


சிவகாசி: வானம் பார்த்த பூமியான கரிசல் மண்ணில் வாழும் மக்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டுவதே கரிசல் இலக்கியம், என சிவகாசியில் நடந்த கரிசல் இலக்கிய விழாவில் காணொலி மூலம் கனிமொழி எம்பி பேசினார்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கிய கழகம் இணைந்து நடந்தும் இரண்டாவது கரிசல் இலக்கிய திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. இலக்கிய திருவிழாவை தூத்துக்குடி எம்பி கனிமொழி தொடங்கி வைப்பதாக இருந்தது, பாராளுமன்ற கூட்ட தொடர் நடப்பதால் காணொலி மூலம் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது: ''விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதியில் வானம் பார்த்த பூமியான கரிசல் மண்ணில் வாழும் மக்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டுவதே கரிசல் இலக்கியம். கரிசல் இலக்கியம் என்பது அப்பகுதி மக்களின் பேச்சு வழக்கு, வட்டார வழக்கு ஆகியவற்றை மட்டுமே தாங்கி நிற்பதாக பலர் நினைக்கின்றனர். கோவில்பட்டி மண் பல்வேறு கரிசல் எழுத்தாளர்களை நமக்கு அளித்துள்ளது.

இடைச்செவல் கிராமத்தில் பிறந்த கி.ரா தனது எழுத்துக்களில் திருவிழா போல் கொண்டாட்டத்துடனும், அழகிரிசாமி எழுத்துகளில் வாழ்வில் நிதர்சனங்கள், எதிர்பார்ப்பு, ஏக்கம் ஆகியவற்றை பதிவு செய்துள்ளார். இவர்களது வழியிலேயே பல்வேறு எழுத்தாளர்கள் தொடர்ந்து கரிசல் மண் சார்ந்த படைப்புகளை எழுதிக் கொண்டு இருக்கின்றனர்.

கரிசல் மண்ணின் கண்ணீர் கதையை எடுத்துச் சொல்லக்கூடிய எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கரிசல் இலக்கியத் திருவிழா எழுத்தாளர்களை கொண்டாட கூடியதாகவும், மேலும் பல புதிய எழுத்தாளர்களை, புதிய சிந்தனையாளர்களை உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கை உள்ளது.'' இவ்வாறு அவர் பேசினார்.

x