6 பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாததால் புதுச்சேரி முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் - நாராயணசாமி ஆவேசம்


புதுச்சேரி: 6 பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாத நிலையில் மெஜாரிட்டியை இழந்த முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஈவிகேஎஸ் இளங்கோவன் இழப்பு தமிழக மக்களுக்கும், அம்மாநில காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். ஃபெஞ்சல் புயல் மழையால் புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ரங்கசாமி அனைத்து குடும்ப அட்டைக்கும் அறிவித்த ரூ.5 ஆயிரம் நிவாரணம் இப்போது கொடுக்கப்படுகிறது. ஆனால் நிவாரணம் போதுமானதாக இல்லை. அதனை உயர்த்தி வழங்க வேண்டும் என்று நாங்கள் கூறியிருக்கிறோம். ஆனால் இது சம்மந்தமாக முதல்வரோ, அமைச்சர்களோ வாய் திறக்கவில்லை.

தமிழக அரசு வெள்ள பாதிப்பு நிவாரணம் மத்திய அரசிடம் கேட்டிருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் ரூ.600 கோடி நிவாரணத் தொகை முதல்வர் கேட்டுள்ளார். ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இந்த ரூ.600 கோடி போதாது. சரியாக இவர்கள் இழப்பை கணக்கிடவில்லை. முதல்வரை ஒரு பொருட்டாக பிரதமர் மதிக்கவில்லை. புதுச்சேரி மாநில வெள்ள பாதிப்பு குறித்தும், மக்களின் நிலை குறித்தும் முதல்வர் ரங்கசாமியிடம், பிரதமர் கேட்கவில்லை. இங்கு என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி இருக்கிறது. ஆனாலும் பிரதமர் எதையும் கேட்காமல் புதுச்சேரி மாநிலத்தை புறக்கணிக்கிறார்.

பாஜக ராஜ்யசபா எம்பி செல்வகணபதி, நான் பொய்யான தகவல்களை கூறி வருவதாக கூறியுள்ளார். வெள்ளம், புயல் தொடர்பாக முதல்வர் ரங்கசாமியிடம் ஏன் பிரதமர் மோடி பேசவில்லை என அவர் விளக்குவாரா? டெல்லியில் நடந்த வெள்ள நிவாரணம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்றதாக அவர் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்பியை புறக்கணித்தது ஏன்?

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும், கடன் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய நிதிக்கமிஷனில் சேர்க்க வேண்டும் என நீண்டகாலமாக கோரி வருகிறோம். இதற்கு பாஜக எம்பி செல்வகணபதி என்ன குரல் கொடுத்தார்? என தெரிவிக்க வேண்டும். புதுச்சேரியை ஆளும் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக அரசு மெஜாரிட்டி இழந்துள்ளது. பாஜக எம்எல்ஏக்கள் 6 பேர் தனி அணியாக ஜோஸ் சார்லஸ் தலைமையில் செயல்படுகின்றனர். இதை அவர்களே தெரிவித்துள்ளனர். அவரை முதல்வராக ஆக்குவதுதான் தங்கள் குறிக்கோள் என கூறியுள்ளனர்.

இதனால் பாஜக மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் 9 பேரில் 3 பேர் ஆதரவு மட்டும்தான் இந்த அரசுக்கு உள்ளது. நியமன எம்எல்ஏக்களில் ஒருவர் ஜோஸ் சார்லஸை சந்தித்துள்ளார். அவருடன் இணைந்து செயல் படுவதாகவும் தெரிகிறது. இதனால் என்.ஆர்.காங்கிரஸ் 10, பாஜக 3, நியமன எம்எல்ஏ 2 என 33 எம்எல்ஏக்கள் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில் 15 எம்எல்ஏக்கள் மட்டும்தான் அரசுக்கு ஆதரவாக உள்ளனர்.

அரசுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, பாஜக தனி எம்எல்ஏக்கள், சுயேட்சைகள் என 18 பேர் உள்ளனர். எனவே முதல்வர் ரங்கசாமி தார்மீக பொறுப்பேற்று தானாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும். தேவைப்படும் நேரத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம். அதை முன்கூட்டியே தெரிவித்தால், பாஜக ஆள் பிடிக்கும் வேலையில் இறங்குவார்கள். இதனால் சமயம் வரும்போது தீர்மானம் கொண்டுவருவோம். ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை என்பதால் காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வருகிறது” இவ்வாறு அவர் கூறினார்.

x