பச்சிளம் குழந்தைகளுக்கான நெஸ்லே செர்லாக்கின் அதிகளவு சர்க்கரை: மக்களவையில் கனிமொழி கேள்வி


சென்னை: பச்சிளம் குழந்தைகளுக்கான உணவாக விற்கப்படும் நெஸ்லே செர்லாக்கின் ஒரு கரண்டி மாவில், 2.7 கிராம் சர்க்கரை இருப்பது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக திமுக நாடாளுமன்றக்குழுவின் தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இந்தியாவில், பச்சிளம் குழந்தைகளுக்கான உணவாக விற்கப்படும் நெஸ்லே செர்லாக்கின் ஒரு கரண்டி மாவில், 2.7 கிராம் சர்க்கரை இருப்பதாகவும், அதுவே இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் சர்க்கரை சேர்க்கப்படாமல் விற்கப்படுவதாகவும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன்.

குழந்தைகளுக்கு இளவயதில் உடல்பருமன் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களுக்கு உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை வழிகோலும் என்பதால், இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் உணவில் சர்க்கரை சேர்க்கக்கூடாது என்ற உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலை நெஸ்லே நிறுவனம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, இதுபோன்று குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உலகளாவிய சுகாதாரப் பரிந்துரைகளுக்கு இணங்க, குழந்தைகள் உணவுத் தயாரிப்பிற்கான தரநிலையை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

x