திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் ‘அதிகாரம்’ காண்பித்த காவல் துறை - நடந்தது என்ன?


காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகளை அழைத்து செல்ல பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் காவல்துறையினர் கெடுபிடியால் பக்தர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளிடம் காவல்துறையினர் தங்களது அதிகாரத்தை காண்பித்தது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணி என்ற பெயரில் 14 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மாட வீதியை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட சாலைகளில், முதல் பணியாக தடுப்புகளை அமைத்தனர். இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள், வீடுகளில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தினர். இரு சக்கர வாகனங்கள் செல்லவும் கெடுபிடி செய்தனர்.

திருவண்ணாமலை மாநகரில் நவீன முறையில் பொதுமக்கள் சிறை பிடிக்கப்பட்டனர்.‘மலையே மகேசன்' என போற்றப்படும் 14 கி.மீ., சுற்றளவு கொண்ட திரு அண்ணாமலையை வலம் வர முடியாத பக்தர்கள், மாட வீதியில் வலம் வந்து, இறைவனை தரிசிப்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் வழக்கமாகும். இவ்வாறு மாட வீதியில், பக்தர்கள் வலம்வர முடியாத அளவுக்கு காவல்துறையினரின் கெடுபிடி அதிகரித்தது.

மாட வீதியில் உள்ள பெரிய தெரு மற்றும் பே கோபுர வீதி வழியாக அம்மணி அம்மன் கோபுரத்தை விஐபிக்களின் வாகனம் சென்றடைய வேண்டும் என்பதற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசன அடையாள அட்டையுடன் வந்த பக்தர்களும், ஆங்காங்கே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். பொதுமக்கள், பக்தர்கள் ஆகியோரிடம் காட்டிய கெடுபிடியை பணியில் ஈடுபட சென்ற வருவாய்த் துறை அதிகாரிகளிடம் காண்பித்தனர். இதில், ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியனும் இடம்பெற்றார்.

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, மின்விளக்கு அலங்காரத்தில்
ஜொலிக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்.

அண்ணாமலையார் கோயில் உள் பகுதியில் பல்வேறு இடங்களில், பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டு, பிரத்யேக அடையாள அட்டையுடன் சென்ற வருவாய்த் துறை அதிகாரிகள், அலுவலர்களை பே கோபுரம் - வட ஒத்தவாட தெரு சந்திப்பில் காவல் துறையினர் நேற்று அதிகாலை தடுத்து நிறுத்தினர். யாரையும் அனுமதிக்க முடியாது என கூறியதால் அவர்கள் விழிபிதுங்கி நின்றனர்.

அப்போது அங்கு வந்த, திருவண்ணாமலை கோட்டாட்சியர் மந்தாகினி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவதாஸ் உள்ளிட்டவர்களின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. கார்களில் இருந்து இறங்கி நடந்து செல்லலாம் என காவல்துறையினர் உத்தரவிட்டனர். வட ஒத்தவாட தெருவில் அனுமதிக்க முடியாது என கூறிய காவல் துறையுடன், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதேநேரத்தில் ஆந்திரா, கர்நாடகா பதிவு எண் கொண்ட கார்கள் மற்றும் விஐபிக்களின் கார்கள் தொடர்ச்சியாக அனுமதிக்கப்பட்டன. கோட்டாட்சியர் வாகனத்தை அனுமதிக்க மறுக்கும் நீங்கள், பிற வாகனங்களை அனுமதிப்பது ஏன்? என கேள்வி எழுப்பினர். இதே நிலை நீதித்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவதற்கு கோயிலில் ஏற்றப்பட்ட
5 பரணி தீபத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தீபத்தை அணையாமல்
மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவர்களும், காவல்துறையினர் செயலுக்கு தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இதனால், பே கோபுரத் தெருவில் வருவாய்த் துறையினரின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதற்கிடையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா, நகராட்சி ஆணையர் காந்திராஜன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது ஆட்சியரிடம், கோயில் உள்ளே பணிகளை மேற்கொள்ள காவல் துறையினர் உள்ளே அனுமதிக்காமல், பல மணி நேரம் காத்திருப்பதாகவும், ஒருமையில் பேசுவதாகவும் வருவாய்த் துறையினர் முறையிட்டனர்.

உடனடியாக, காரில் இருந்து இறங்கிய ஆட்சியர், 3 மாதங்களாக தீபத் திருவிழா ஏற்பாடுகளை செய்து வருகிறோம். வருவாய்த் துறையினரை தடுத்தால், அவர்களது பணியை யார்? செய்வது, துப்புரவு வாகனங்களை அனுமதிப்பது இல்லை, என்ன பணி செய்கிறீர்கள்? என காவல் துறையினரை கடிந்து கொண்டார். பின்னர், ஆட்சியரின் பெரு முயற்சியின் காரணமாக, வருவாய்த் துறையினர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதேநேரத்தில், ஆட்சியர் உள்ளிட்டோரின் வாகனங்களையும் அனுமதிக்க காவல்துறையினர் முன்வரவில்லை. பின்னர், தடுப்புகளை விலக்கிக் கொள்ளுமாறு ஆட்சியரே நேரிடையாக தலையிட்டு, தனது வாகனத்தை கொண்டு சென்றார்.

ஒரு கட்டத்தில், தீபத் திருவிழா பணிகளை முற்றிலும் புறக்கணிக்க முடிவெடுக்கப்படும் என வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி அதிகாரிகள் எச்சரித்தனர். இதேபோல், அம்மணி அம்மன் கோபுரம், கிளி கோபுரம், தீப தரிசன மண்டபம் உட்பட பல இடங்களில் வருவாய்த் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரையின் அருகே மலையில்
உள்ள பாதம் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

யார்? யாருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு: இதுகுறித்து வருவாய்த் துறையினர் கூறும் போது, “திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என காவல்துறையினர் கருதுகின்றனர். காவல்துறையின் அதிகாரிகள், உயர் அதிகாரிகள் வாகனங்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் வாகனங்கள், அரசியல் செல்வாக்கில் உள்ளவர்களின் வாகனங்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். அவர்களையும் மிகுந்த எச்சரிக்கையுடன், தரிசனத்து அழைத்து சென்றனர்.

இதற்காகத்தான், கோயிலை சுற்றி பாதுகாப்பு என்ற பெயரில் அவர்கள் செயல்பட்டனர். இதேபோல், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஆட்சியராக பணியாற்றிய ஞானசேகரனையும் உள்ளே விடாமல் காவல் துறையினர் தடுத்துநிறுத்தினர். காவல்துறையினர் தங்களது செயலை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் தீபத் திருவிழாவை புறக்கணிக்கும் நிலையை மேற்கொள்ள நேரிடும்” என ஆவேசத்துடன் கூறினர்.

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் கரும்பு
தொட்டிலில் குழந்தையை வைத்து கிரிவலம் சென்று நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
| படங்கள்: வி.எம்.மணிநாதன்.|

முன்பே எச்சரித்த ‘இந்து தமிழ் திசை' - திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் காவல்துறையினருக்கான விழாவாக நடத்தப்படுகிறது. இந்தாண்டு பக்தர்களுக்கான விழாவாக நடத்த வேண்டும் என ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் கடந்த 11-ம் தேதி செய்தி வெளியிட்டது.

காவல்துறையினரின் கெடுபிடி மற்றும் ஒருமையில் பேசி அடாவடியில் ஈடுபடுவது, கோயில் உள்ளே கூடுதல் எண்ணிக்கையில் பாதுகாப்பு என்ற பெயரில் இன்னல்கள் கொடுப்பது போன்ற செயல்கள் தொடர்வது சுட்டி காட்டப்பட்டிருந்தது. அதன்பிறகும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டனர். இதனால் பக்தர்களை தொடர்ந்து வருவாய்த் துறையினரும் காவல்துறையினரின் அதிகார நெருக்கடியை சந்தித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.

x