பழநி: பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆலோசனைகள் வழங்க வசதியாக மின்னணு ஆலோசனை பெட்டி இன்று (சனிக்கிழமை) பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் தரிசன அனுபவம் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க வசதியாக, இன்று (சனிக்கிழமை) ‘மின்னணு ஆலோசனைப் பெட்டி’ பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பழநி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி பங்கேற்று, மின்னணு ஆலோனை பெட்டியை பக்தர்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். துணை தலைவர் கந்தசாமி, கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி கலந்து கொண்டனர்.
மின்னணு ஆலோசனைப் பெட்டியில் உங்கள் புகார் மற்றும் ஆலோசனைகளை எங்களிடம் பகிர்ந்து கொள்ளவும் - தொடுக என்பதை தேர்வு செய்து, பக்தர்கள் தங்கள் தரிசன அனுபவம் மற்றும் ஆலோசனைகளை தொடுதிரை வழியாக பதிவு செய்யலாம். பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், கோயிலை பாதுகாப்பது போன்ற பக்தர்கள் பதிவு செய்யும் ஆலோசனைகள் பரிசீலனை செய்யப்படும்.