ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு: இபிஎஸ், சீமான், அண்ணாமலை, விஜய் இரங்கல்!


சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, சீமான், அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ், விஜய் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

அன்புச் சகோதரரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன்.

அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காங்கிரசு கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.

ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், காங்கிரசு கட்சியின் தொண்டர்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். ஐயா இளங்கோவன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!' எனத் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத பங்களிப்பு செய்த தலைவர்களின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ஒருவர். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், செயல் தலைவர் என ஏற்றுக் கொண்ட பொறுப்புகள் அனைத்தையும் திறம்பட வகித்தவர். மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நான் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போது பல்வேறு துறைகளின் இணை அமைச்சராக பணியாற்றியவர் இளங்கோவன் . என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த அவர், நலம் பெற்று வீடு திரும்புவார் என எதிர்பார்த்திருந்த வேளையில் அவரது மறைவுச் செய்தி மனதை வாட்டுகிறது. அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பாகும்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்’ எனத் தெரிவித்துள்ளார்

x