குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே அகல் விளக்கின் தீபம் பட்டு டெய்லர் ஒருவர் படுகாயமடைந்தார்.
குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், இராஜாஜி தெருவை சேர்ந்தவர் மோகன் (50). இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். மோகன் பல்லாவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று கார்த்திகை தீபம் என்பதால் அவர்களது வீட்டின் முன்பாக அகல்விளக்கு வைத்து வழிபட்டதாக கூறப்படுகிறது. அதன் அருகிலேயே அமர்ந்து மோகன், பெட்ரோல் வைத்து தனது இருசக்கர வாகனத்தை துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அகல் விளக்கின் தீபம் பெட்ரோல் மீது பட்டதில் மோகன் மீது தீ பற்றிக் கொண்டது. இதில் படுகாயமடைந்து மோகன் அலறவே, அவரது அலறல் சத்தம் கேட்டு திரண்டு வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக தீயை அணைத்து, மோகனை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
60% தீக்காயங்களுடன் அங்கு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அகல் விளக்கின் தீபம் பட்டு, டெய்லர் மீது நெருப்பு பற்றிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.