புதுடெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் மறைவையொட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அச்சமற்ற மற்றும் கொள்கை ரீதியான தலைவர். அவர் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்காக ஒரு உறுதியான தலைவராக இருந்தார். தமிழ்நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு சேவையும் என்றென்றும் நமக்கு உத்வேகமாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் ஒரு நேர்மையான மற்றும் தைரியமான தலைவர். கொண்ட கொள்கைக்காக ஒருமித்த கருத்தை உருவாக்குபவர். காங்கிரஸ் கட்சி மற்றும் தந்தை பெரியாரின் முற்போக்கு கொள்கைகளை நிலைநிறுத்த அவர் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார், உறுதியான அர்ப்பணிப்புடனும் தமிழக மக்களுக்கு சேவை செய்தார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.