‘பெரியாரின் பேரன்; காங்கிரஸின் கலகக்குரல்’ - யார் இந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்?


சென்னை: காலமான காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ். இளங்கோவன் குடும்ப பின்னணி, அரசியல் பயணம் குறித்து பார்ப்போம்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் (வயது 75) உடல்நலக் குறைவால் இன்று காலை 10.12 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பு உறுதி செய்துள்ளது.

காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 11-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார்.

இவர் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் மகன் ஈ. வெ. கி. சம்பத் அவர்களின் மகன்தான் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவரது மனைவி பெயர் வரலட்சுமி, இவர்களுக்கு 2 மகன்கள். இரண்டாவது மகன் திருமகன் ஈவெரா 2023 ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த அவரது திருமகன் ஈவேரா உயிரிழந்த நிலையில் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிட்டு கடந்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் ஈவிகேஎஸ் 39 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கு முன்னதாக 1984-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். அதன்பின்னர் கடந்த 1989-ம் ஆண்டு சிவாஜி கணேசனின் கட்சியின் சார்பில் பவானிசாகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். ஏற்கெனவே, கடந்த 1996, 2004, 2009 மற்றும் 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் போட்டியிருந்த அவர், 2004ல் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக பதவி வகித்தார். 2004 முதல் 2009ம் ஆண்டு வரை மன்மோகன் சிங் அரசில் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சராகவும் பதவி வகித்தார்.

இவர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 1996 முதல் 2001 ம் ஆண்டுவரை முதன்முறையும், 2014 முதல் 2017 வரை இரண்டாம் முறையாகவும் பதவி வகித்துள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸில் துணிச்சலாக பல அதிரடி கருத்துகளை தெரிவித்து வந்தார். அவரின் கலகக்குரல் பல நேரங்களில் காங்கிரஸ் கட்சியை பேசுபொருளாக்கியுள்ளது. அவரின் இழப்பால் காங்கிரஸ் தொண்டர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.

x