‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால் திட்டத்தை கைவிட அன்புமணி வலியுறுத்தல்


சென்னை: குறைவான அளவில் அதிக விலை கொண்ட ‘ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ்’ பாலை அறிமுகம் செய்வதை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ என்ற பெயரில் புதிய பச்சையுறை பால் வரும் 18-ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படும் என்று ஆவின் அறிவித்திருக்கிறது.

தற்போது ஆவின் கிரீன் மேஜிக் பால் 500 மிலி ரூ.22-க்கு விற்கப்படுகிறது. அதில் 4.5 சதவீத கொழுப்பு சத்து, 9 சதவீத கொழுப்பு அல்லாத திடப்பொருள்கள் உள்ளன. புதிதாக அறிமுகம் செய்யப்படும் பாலிலும் இதே சத்துகள், இதே அளவில்தான் உள்ளன. கூடுதலாக விட்டமின் ஏ, டி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்படும் பயன்களும், அதற்காக ஆவின் நிறுவனத்துக்கு ஆகும் செலவும் குறிப்பிடத்தக்கவை அல்ல.

லிட்டருக்கு ரூ.11 அதிகம்: ஆனால், கிரீன் மேஜிக் ஒரு லிட்டர் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 900 மி.லி ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிரீன் மேஜிக் பால் 500 மி.லி ரூ.22-க்கு விற்கப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 450 மி.லி ரூ.25-க்கு விற்கப்படும்.

அப்படிப் பார்த்தால் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை லிட்டர் ரூ.55 ஆகும். இது கிரீன் மேஜிக் பாலின் விலையைவிட லிட்டருக்கு ரூ.11 அதிகம். ஆவின் கிரீன் மேஜிக் பாலுடன் பிளஸ் என்ற வார்த்தையை கூடுதலாக சேர்ப்பதற்காக ரூ.11 அதிகம் வசூலிப்பது பகல் கொள்ளையாகும்.

பாலின் விலை உயர்வு அதிகமாக தெரியக்கூடாது என்பதற்காக ஓர் உறையின் விலையை ரூ.3 உயர்த்தி விட்டு, பாலின் அளவை 50 மி.லி குறைத்து, பொதுத்துறை நிறுவனம் மோசடிகளில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. எனவே, அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x