தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் நிலவி வருகிறது.
கனமழை எதிரொலியாக இன்று தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, திருச்சி, விழுப்புரம், தேனி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதியின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு இன்று சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.