சென்னை: இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மிக தீவிரமாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்துள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி 29 இடங்களில் அதிகனமழையும், 81 இடங்களில் மிக கனமழையும், 16 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 54 செ.மீ., அம்பாசமுத்திரம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 37, திருநெல்வேலி மாவட்டம் கன்னடயன் அணைக்கட்டு, காக்காச்சியில் தலா 35, மாஞ்சோலையில் 32, தென்காடி மாவட்டம் ஆயிக்குடி, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, கடலூர் மாவட்டம் லால்பேட்டை ஆகிய இடங்களில் 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த அக். 1 முதல் டிச. 13 வரை 54 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 40 செ.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டு வழக்கத்தைவிட 32 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. டிச. 12-ம் தேதி வரை 16 சதவீதம் மட்டுமே மழை அதிகமாக இருந்தது. ஒரே நாளில் 16 சதவீதம் கூடுதலாக மழை கிடைத்துள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழக்கக் கூடும். தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று நிலவும். இதன் காரணமாக வரும் 16-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரலாம். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 16, 17, 18-ம் தேதி களில் பரவலாகவும், 19-ம் தேதி சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
வரும் 16-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 17-ம் தேதி கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 18-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வரும் 17-ம் தேதி அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.