தத்தளிக்கும் தென்மாவட்டங்கள் முதல் ‘ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம்’ வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


கனமழையில் தத்தளிக்கும் தென்மாவட்டங்கள்! - தமிழகத்தில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கின. குறிப்பாக, தென் மாவட்டங்களில் விடிய விடிய கொட்டிய கனமழையால் பல குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தன.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் முதலான மாவட்டங்களில் கனமழை பெய்தது.

குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. பழநியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

‘பெரிய அளவில் பாதிப்பு இல்லை’ - முதல்வர் ஸ்டாலின்: “தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், பெரிய அளவுக்கு மழை பெய்துள்ளது. ஆனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை செய்திகள் இல்லை. எது வந்தாலும், அதை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்த அரசு தயாராக இருக்கிறது,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: அடுத்த 48 மணி நேரத்தில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும், தமிழகத்தில் டிசம்பர் 16 முதல் 18-ம் தேதி வரை மீண்டும் கனமழை வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், “தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 29 இடங்களில் அதி கனமழையும், 81 இடங்களில் மிக கனமழையும், 168 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக, நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 54 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது.

அடுத்த வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில், தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்கள், மத்திய மேற்கு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் அநேக இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும், நெல்லை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும் ஏனைய தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிடுக: இபிஎஸ் - கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று தண்ணீரில் மூழ்கியுள்ள வேளாண் பயிர்களைக் கணக்கெடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் அளிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

கனமழையால் ரயில்கள் தாமதம்: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அத்துடன், சில இடங்களில் சிக்னல் கோளாறும் ஏற்பட்டது. இதன் காரணமாக, தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.

திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து துயரம்: திண்டுக்கல்லில் உள்ள திருச்சி சாலையில் நான்கு மாடி கட்டிடத்தில் சிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 60-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். வியாழக்கிழமை இரவு கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள மின்சாதனம் வெடித்து சிதறியதில் தீப்பற்றியது. விபத்தில் 6 வயது சிறுமி உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

‘வலுவான போராட்டம்...’ - தமிழக அரசு ஊழியர்கள் எச்சரிக்கை: பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக மவுனம் கலைத்து, நல்ல முடிவை அறிவிக்காவிட்டால், அரசுக்கு எதிராக வலுவான போராட்டங்களை நடத்துவோம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு: சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த டி.குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வென்று சாதனை படைத்துள்ளார்.

மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக செஸ் சாம்பியனாக வாகைசூடி சாதனை படைத்து, இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்த டி.குகேஷை, தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். அத்துடன் தொலைபேசி வாயிலாகவும் அவரைத் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ள குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு வழங்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார். அதையேற்று, டி.குகேஷை மேலும் ஊக்குவிக்கும் வகையில், ரூ.5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

“அரசமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்த முயன்றனர்” - பிரியங்கா: வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக பிரியங்கா காந்தி மக்களவையில் வெள்ளிக்கிழமை உரையாற்றினார். அப்போது, நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும் அரசியலமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளையும் ஆளும் கட்சியான பாஜக மேற்கொண்டது என குற்றம் சாட்டினார்.

பின்னர், நாடாளுமன்ற உறுப்பினராக தான் ஆற்றிய முதல் உரையைவிட, தனது தங்கை பிரியங்கா காந்தியின் முதல் உரை சிறப்பாக இருந்ததாக ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி! - ஏடிஎம் மையத்தில் பிஎஃப் பணத்தை எடுக்கும் திட்டம் அடுத்த ஆண்டு ஜூனில் அமலுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூத்த அதிகாரிகள் கூறும்போது, “பிஎஃப் பணத்தை எடுக்கும் நடைமுறை மிகவும் கடினமாக இருப்பதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். இதை எளிமைப்படுத்த வங்கிகளை போன்று ஏடிஎம் மையங்களில் பிஎப் பணத்தை எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு ஏடிஎம் அட்டை வழங்கப்படும்.

பணம் தேவைப்படும் பிஎஃப் சந்தாதாரர்கள் முறைப்படி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட பிறகு ஏடிஎம் மையங்களில் எளிதாக பணம் எடுத்து கொள்ளலாம். எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பதற்கு வரம்பு நிர்ணயிக்கப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘சிறுபான்மையினரை வங்கதேச அரசு பாதுகாக்க வேண்டும்’ - வங்கதேசம் தனது சொந்த நலனுக்காக, சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

x