புதுச்சேரி: மத்திய குழுவிடம் வெள்ள பாதிப்பு குறித்த போட்டோ, வீடியோ ஆதாரங்களை மாவட்ட நிர்வாகம் அளிக்க தவறியது மன்னிக்க முடியாத குற்றமாகும் என்று புதுச்சேரி அதிமுக தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''ஃபெஞ்சல் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மாநிலத்தை பார்வையிட வருகை தந்த மத்திய குழுவிடம், பாதிப்புகள் குறித்த விவரங்கள், அதற்கான புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்களை மாவட்ட நிர்வாகம் அளிக்க தவறியுள்ளது. இதனால் மத்திய அரசிடம் இருந்து நமக்கு உடனடியாக வரவேண்டிய பேரிடர் நிவாரண உதவி இதுவரையில் வழங்கப்படவில்லை. இதையே காரணமாக வைத்துக்கொண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசும், நம் மாநிலத்துக்கு உரிய நிவாரண நிதியை வழங்காதது கண்டிக்கத்தக்கதாகும்.
பெருமழை மற்றும் பெரு வெள்ளத்தால் எந்தெந்த தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும் என்பதை கூட வருவாய்துறை அதிகாரிகள் இனம் காணவில்லை. நம் மாநிலத்தை ஒட்டியுள்ள வீடுர் அணை, சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டால் நம் மாநிலத்தில் எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும் என்பதை கூட அறியாமல் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை.
நகரப்பகுதிகளில் கழிவு நீர் வாய்க்காலில் நீர் பெருக்கெடுத்து ஓடி உப்பளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் உட்புகுந்து வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது. இரண்டு தினங்களில் இந்த மழை நீர் முழுமையாக வற்றியது. இந்த மழை நீர் தேங்கிய போது கூட மாவட்ட நிர்வாகத்தின் வட்டாட்சியர்கள் யாரும் அதை பார்வையிட்டு அதற்கான போட்டோ, வீடியோ ஆதாரங்களை தயார் செய்யவில்லை. இது மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயலாகும்.
மத்திய குழு நம் மாநிலத்தை பார்வையிட வருகை தந்த போது வெள்ளம் பாதித்த தண்ணீர் வடிந்துவிட்டதால் பாதிப்புகளை அவர்களால் காணமுடியவில்லை. இதுபோன்ற பாதிப்புகளுக்கான ஆதாரங்களை மாவட்ட நிர்வாகம் வழங்க தவறியது என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். தற்போது சட்டப்பேரவை தலைவர் அதிகாரிகள் தங்களது மெத்தன போக்கினால் புதுச்சேரி மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய நிதியை கிடைக்காமல் செய்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டை பகீரங்கமாக தெரிவித்துள்ளார். பலமுறை தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுவது ஒரு சம்பிரதாயமான அறிவிப்பாக உள்ளது.
இதுபோன்ற அறிவிப்பு அதிகாரிகளை மிரட்டும் அறிவிப்பாக இல்லாமல் அலட்சியத்துடன் செயல்படும் அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை தலைமைச் செயலாளர் உடனடியாக எடுக்க வேண்டும். அரசால் அறிவிக்கப்பட்ட புயல் நிவாரண நிதி ரூ. 5000 அவரவர் வங்கி கணக்கில் போடப்பட்டுள்ளது. இதை வங்கி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பிடித்தம் செய்யப்படுகிறது. அரசால் போடப்பட்டுள்ள நிவாரணத் தொகையில் வங்கிகள் எந்த பணத்தையும் பிடித்தம் செய்யக்கூடாது என அரசு வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் கூறினார்.