தூத்துக்குடி: தமிழக அரசு மீதான நம்பிக்கையை அரசு ஊழியர்கள் இழந்துவிட்டனர். தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக தமிழக முதல்வர் உடனடியாக மவுனம் கலையாவிட்டால் அரசுக்கு எதிராக வலுவான போராட்டங்களை நடத்துவோம் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15-வது மாநில மாநாடு தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் இன்று (டிச.13) தொடங்கியது. இதனை முன்னிட்டு மாநில துணைப் பொதுச்செயலாளர் தெ.வாசுகி மாநில பிரதிநிதித்துவ பேரவை பேரணியை தொடங்கி வைத்தார். சங்கத்தின் மாநில தலைவர் (பொ) சா.டேனியல் ஜெயசிங் தலைமை வகித்தார். சிஐடியு அகில இந்திய செயலாளர் இரா.கருமலையான் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். வரவேற்புக் குழு தலைவர் ஞா.ஞானராஜ் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் சி.எஸ்.கிறிஸ்டோபர் அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றினார். பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் வாழ்த்தி பேசினர். மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் மாநில தலைவர் டானியல் ஜெயசிங் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் ஆ.செல்வம் வேலை ஸ்தாபன அறிக்கை சமர்பித்தார். பொருளாளர் மு.பாஸ்கரன் வரவு செலவு அறிக்கை சமர்பித்தார். பிற்பகலில் மாநில துணைத் தலைவர் சி.பரமேஸ்வரி தலைமையில் மகளிர் அமர்வு நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை பேராசிரியர் சா.சுபா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜெ.உமாதேவி நன்றி கூறினார். மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து சுமார் 1000 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அரசுக்கு எச்சரிக்கை: முன்னதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆ.செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ''புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது எங்களது வாழ்வாதார கோரிக்கையாகும். தமிழக முதல்வர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவோம்'' என தெரிவித்தார்.
மேலும், ''தேர்தல் வாக்குறுதியிலும் இதனை தெரிவித்தார்கள். ஆனால், இதுவரை நிறைவேற்றவில்லை. அதுபோல அரசு துறைகளில் உள்ள 6 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பு பலன்களை வழங்கிட வேண்டும். அவுட்சோர்சிங், ஒப்பந்த முறையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட 3.5 லட்சம் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
பணமில்லா சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே செயல்படுத்த வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 5 சதவீதமாக குறைத்ததை மீண்டும் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பன போன்ற எங்களது கோரிக்கைகளை தமிழக முதல்வரும், தமிழக அரசும் ஏற்றுக் கொண்டது. ஆனால், 42 மாத காலங்கள் ஆகியும் இதுவரை ஒரு கோரிக்கையை கூட நிறைவேற்றவில்லை. இது தொடர்பாக தமிழக முதல்வரை 8 முறை சந்தித்து பேசியும் எந்த பயனும் ஏற்படவில்லை.
அரசு ஊழியர்களால் தான் இந்த அரசு 6-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது என கூறும் தமிழக முதல்வர், எங்களது கோரிக்கைகள் குறித்து ஏன் மவுனமாக இருக்கிறார் என்பது தெரியவில்லை. அரசு ஊழியர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்த அரசு மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். தமிழக முதல்வர் உடனடியாக தனது மவுனத்தை கலைக்க வேண்டும். நாளைக்குள் (டிச.14) நல்ல முடிவை முதல்வர் அறிவிக்க வேண்டும். இல்லையெனில் அரசுக்கு எதிராக வலுவான போராட்டத்தை முன்னெடுப்போம். இது தொடர்பாக இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுவோம்'' என்றார் அவர்.
மாநாடு நாளையும் (டிச.14) தொடர்ந்து நடைபெறுகிறது. தங்களது கோரிக்கைகளை தொடர்பாக நாளை பல்வேறு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றப்படவுள்ளன. தொடர்ந்து மாலையில் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் டி.கே.ரங்கராஜன் மாநாட்டை நிறைவு செய்து வைத்து பேசுகிறார்.