தென்காசி: தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஏராளமான வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் நீரில் மூழ்கின.
தென்காசி மாவட்டத்தில் நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து இன்று 10 மணி வரை தொடர்ந்து 29 மணி நேரம் மழை பெய்தது. மதியத்துக்கு மேல் சில பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. முதல் நாளில் தூறலாக இருந்த மழை இரவில் வலுத்தது. விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் சிற்றாறு, அனுமன் நதி, ராமநதி, கடனாநதி, கருப்பாநதி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
செங்கோட்டைக்கு மேற்கு பகுதியில் உள்ள தஞ்சாவூர் குளம் உடைந்து கொல்லம் - திருமங்கலம் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை தீயணைப்புத்துறை, காவல்துறையினர் மீட்டனர். தமிழகம்- கேரள மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையான இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சாலையின் இரு புறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகனங்கள் விஸ்வநாதபுரம் வழியாக திருப்பி விடப்பட்டன.
இதேபோல் செங்கோட்டை அருகே கட்டளைகுடியிருப்பு பகுதியில் நீலியம்மன் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடிய நீர் கொல்லம்- திருமங்கலம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. செங்கோட்டைக்கு மேற்கு பகுதியில் பூலாங்குடியிருப்பு உள்ளிட்ட சில கிராமத்துக்கு செல்லும் வழிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தஞ்சாவூர் குளம் உடைந்து வெளியேறிய தண்ணீர் வயல்களில் புகுந்ததால் பயிர்கள் நீரில் மூழ்கின. இதேபோல் காசிமேஜர்புரம், கட்டளைகுடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வயல்களில் பயிர்கள் நீரில் மூழ்கின.
குற்றாலம் பிரதான அருவி வெள்ளம் அருவிக்கரை அருகே உள்ள பிரசித்தி பெற்ற குற்றாலநாத சுவாமி கோயிலுக்குள் புகுந்தது. கோயில் வளாகத்தில் தேங்கி நின்ற நீரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பிரதான அருவி வெள்ளம் சந்நிதி பஜாரில் பெருக்கெடுத்து ஓடியது. பாதுகாப்பு கருதி அந்த பகுதிகளில் உள்ள கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இதேபோல் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள்ளும் மழை நீர் தேங்கியதால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.
ஆலங்குளத்தில் கனமழை காரணமாக 10-க்கும் மேற்பட்ட கடைகளில் தண்ணீர் புகுந்ததால் பல லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் சேதமடைந்தன. பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சில வீடுகளில் மழைநீர் புகுந்தது. துத்திகுளம் சாலையில் உள்ள பீடி நிறுவனத்தில் வெள்ளம் புகுந்ததால் அங்கு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் நனைந்து வீணாகின. தாழ்வான பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட கார்கள், இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கின.
கடப்போகாத்தி வழியாக மேலப்பாவூர் செல்லும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் இந்த பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆழ்வார்குறிச்சி அருகே செங்கானூர் கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் இப்பகுதியிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் செங்கானூர் கிராம மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
பாவூர்சத்திரம் அருகே செல்வவிநாயகர்புரத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையிலும் 10 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பால பணி நடைபெறுவதால் சாலை மோசமான நிலையில் உள்ளது. இதனால் சுரங்கப்பாதை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வந்த நிலையில், அப்பகுதியில் செல்ல முடியாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
நான்குவழிச் சாலை பணியில் ஈடுபட்டுள்ள வெளி மாநில தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள ஷெட்டில் தங்கியிருந்தனர். அதற்குள் தண்ணீர் புகுந்ததால் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது.
தென்காசியில் இருந்து ஆயிரப்பேரி செல்லும் சாலையில் உள்ள சிற்றாற்று பாலத்தின் மேல் பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் இந்த வழியிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தென்காசி யானைப்பாலம் பகுதியில் சிற்றாற்றில் வெள்ள கரைபுரண்டு ஓடியதால் இந்த வழியிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தென்காசி அருகே ஆயிரப்பேரியில் இறந்தவரின் உடலை எரியூட்ட மயானத்துக்கு சென்ற 50-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, கயிறு கட்டி அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
கடையம் அருகே ஜம்புநதி பாலம் மூழ்கியதால் இந்த வழியிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. போக்குவரத்து நிறுத்தப்பட்ட வெள்ள அபாயம் நீங்கியதும் போக்குவரத்தை அனுமதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் அப்பகுதிகளில் உள்ளவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.