புதுச்சேரி: பயனாளிகளுக்கு கிடைக்காமல் மழை நிவாரணத்தொகை வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி கடன்களுக்கு வங்கிகள் வரவு வைத்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவரும் எம்பியுமான செல்வகணபதி சுட்டிக் காட்டியுள்ளார்.
புதுச்சேரி ஃபெஞ்சல் புயலால் கடும் பாதிப்புக்கு உள்ளானது. நகரப்பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்து அத்தியாவசிய பொருட்கள், டிவி, பிரிட்ஜ் சேதமடைந்தன. பல பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் கடும் பாதிப்பில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தின் அணைகள் திறப்பால் கிராமப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் டூ வீலர்கள், கார்கள் சேதம் அடைந்தன.
புயல் பாதிப்பு காரணமாக புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் 3.54 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிவாரணத்தை முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். ஆளுநர் ஒப்புதல் தந்து உடனடியாக நேற்று பயனாளிகள் வங்கி கணக்கில் பணமும் செலுத்தப்பட்டது. இதற்கு அரசு ரூ. 177 கோடி ஒதுக்கியது.
பலரும் நிவாரணத் தொகை கிடைத்ததை எடுத்தனர். ஆனால் சிலரோ தங்களுக்கு தொகை கிடைக்கவில்லை என்றனர்.
இது தொடர்பாக பலரும் வங்கிகளில் சென்று விசாரித்தபோது, வங்கிக்கடன் காரணமாக நிவாரணத் தொகையை வங்கிகள் செலுத்தாமல் இருப்பது தெரிந்தது.
இது பற்றி பாஜக மாநிலத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான செல்வகணபதி கூறுகையில், வரவு வைக்கப்படும் புயல் நிவாரணத் தொகைக்கு எதிராக வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு எதிராக வரவு வைக்கக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவு உள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை மீறி சில வங்கிகள் கணக்கு வைத்திருப்போருக்கு நிவாரணத் தொகையை வழங்க மறுக்கின்றன.
அரசிடம் இருந்து பெறப்பட்ட புயல் நிவாரணத்தை வங்கிகள் கடன்கள் மற்றும் நிலுவைத் தொகைகளுக்கு எதிராக வரவு வைக்க வேண்டாம். அத்தொகையை உடன் விடுவிக்க வேண்டும். அனைத்து வங்கிகளுக்கும் தேவையான உத்தரவை பிறப்பிக்க இந்திய வங்கி மண்டல மேலாளரிடம் கோரியுள்ளேன் என்று தெரிவித்தார்.