ராமநாதபுரம்: பரமக்குடி அருகே தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 1-ம் வகுப்பு படித்து வந்த 5 வயது சிறுமி உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் வறட்சியானப் பகுதியான கமுதியில் அதிகபட்சமாக 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் கடலாடி, வாலிநோக்கம், பரமக்குடி பகுதிகளில் 10 செ.மீ-க்கு மேல் மழை பதிவாகியுள்ளது.
அதனால் மாவட்டத்தில் நகர் பகுதிகளில் சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. ராமநாதபுரம் அருகே லாந்தை பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதையில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியதால் அந்த சாலையை மக்கள் பயன்படுத்த முடியவில்லை. இதனால் அந்த சுரங்கப்பாதை வழியாகச் செல்லும் 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 3 கி.மீ சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் நேற்றும், இன்றும் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டார்.
சுவர் இடிந்து சிறுமி உயிரிழப்பு: பரமக்குடி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பரமக்குடி அருகே மேலாய்க்குடி கிராமத்தில் யாதவர் தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி பால்ராஜ் என்பவரின் ஓட்டு வீட்டின் சுவர் இன்று காலை 8 மணியளவில் மழையால் அதிக ஈரப்பதமாகி வெளிப்பகுதியில் இடிந்து விழுந்தது.
அந்நேரம் பால்ராஜின் மகள் கீர்த்திகா(5) கழிப்பறை செல்வதற்காக நடந்து சென்றார். அப்பொழுது கீர்த்திகாவின் மேல் சுவர் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பின் சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து எமனேஸ்வரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி மேலாய்குடி அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இச்சம்பவம் அக்கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.