கரூர்: பில்லூர் பிரிவு சாலை அருகேயுள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் வெள்ளநீரால் முத்தகவுண்டம்பட்டி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்திய வானிலை மையம் கரூர் மாவட்டத்திற்கு நேற்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்து. கரூர் மாவட்டத்தில் கரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்த நிலையில் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2வது நாளாக இன்றும் (டிச. 13ம் தேதி) பரவலாக அதிகாலை முதல் மழை பெய்த நிலையில் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் 2வது நாளாக இன்றும் (டிச. 13ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் இன்று (டிச. 13ம் தேதி) காலை 8 மணி வரை பதிவான மழையளவு மி.மீட்டரில். பஞ்சப்பட்டி 80, தோகைமலை 70.60, அரவக்குறிச்சி 70.50, அணைப்பாளையம் 57.20, மாயனூர் 43, க.பரமத்தி 39, கிருஷ்ணராயபுரம் 35.40, கரூர் 33.80, கடவூர் 32, குளித்தலை 29.20, மைலம்பட்டி 26, பாலவிடுதி 20 என மொத்தம் 536.70 மி.மீட்டர், சராசரியாக 44.73 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தோகைமலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக பில்லூர் பிரிவு சாலை அருகேயுள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளநீர் சென்றதால் பில்லூர், முத்தகவுண்டம்பட்டி ஆகிய இரு ஊர்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. முத்தகவுண்டம்பட்டியை சேர்ந்தவர்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கு இப்பாலத்தை கடந்துதான் செல்லவேண்டும் அவர்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
சிலர் அவசர தேவைகள் காரணமாக ஆபத்தை பொருட்படுத்தாமல் வெள்ளநீரில் தரைபாலத்தை கடந்து வெளியில் சென்று திரும்புகின்றனர்.