புதுச்சேரி: ரேஷன் கடை ஊழியர்கள் ஊதியம் தரக்கோரி குடிமைப்பொருள் வழங்கல்துறையை முற்றுகையிட்டு இன்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் ரேஷன்கடைகள் பல ஆண்டுகளாக மூடியிருந்தன. செயல்படாத ரேஷன்கடைகளை திறந்து அரிசி, அத்தியாவசிய பொருட்கள் தர மக்கள் கோரிவந்தனர். இந்நிலையில் ஆளுநர் கைலாஷ்நாதன் அனுமதி தந்து, புதுச்சேரியில் ரேஷன்கடைகள் தீபாவளிக்கு முன்பாக திறக்கப்பட்டன.
ரேஷனில் தீபாவளிக்கு இலவச அரிசி, சர்க்கரை விநியோகத்தை முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் கைலாஷ்நாதன் தொடக்கி வைத்தனர். இந்நிலையில் மாதந்தோறும் அரிசி வழங்கும் பணிகள் நடந்து வருவதாக முதல்வர் தெரிவித்திருந்தார். இச்சூழலில் புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல்துறையை ரேஷன்கடை ஊழியர்கள் நலச்சங்கத்தினர் இன்று முற்றுகையிட்டனர். அலுவலகத்தினுள் சென்று தரையில் அமர்ந்து அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறுகையில், ரேஷன்கடைகளை 5 ஆண்டுகளுக்கு பிறகு திறந்தனர். இலவச சர்க்கரை, அரிசியை தீபாவளிக்காக இலவசமாக ரேஷனில் வழங்க உத்தரவிட்டனர். புதுவையில் மொத்தம் 370 ரேஷன்கடைகள் உள்ளது. இதில் 170 கடைகள்தான் திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரேஷன்கடைகள் திறக்கப்படவில்லை. அதற்கு பதிலாக அங்கன்வாடி, அரசு பள்ளி, சமுதாய நலக்கூடத்தில் வைத்து அரிசி வழங்கியுள்ளோம். சம்பளம் இல்லாத நிலையிலும் மக்களுக்கு கிடைக்க வேண்டியதை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் பணியாற்றி வருகிறோம். ரேஷன்கடை பராமரிப்புக்காக ரூ.6 கோடி நிதியை முதல்வர் ரங்கசாமி ஒதுக்கினார்.
ஆனால் இந்த நிதி கூட்டுறவு பதிவாளருக்கு சென்றுள்ளது. இத்தொகையை ரேஷன்கடை ஊழியர்கள், கடை பராமரிப்புக்கு வழங்க மறுக்கிறார். தினக்கூலி ஊழியர்களாக பலருக்கு முறையாக ஊதியம் தரவில்லை. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது. 50 மாத சம்பளபாக்கியுள்ளது. அரசு உத்தரவிட்டும், ஊதியம் தர அதிகாரிகள் மறுக்கின்றனர்.
குடிமைப்பொருள் வழங்கல்துறை நிதியை ரேஷன்கடைகளுக்கு ஒதுக்கவில்லை. காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகின்றனர். மாதம் ரூ. 4 ஆயிரம்தான் சம்பளம் நிர்ணயித்துள்ளனர். பணிநிரந்தரம் செய்யவேண்டும். கூட்டுறவுத்துறை தலைமை அலுவலகத்தில் ஸ்தம்பிக்கும் வகையில் செயல்படுவோம். மாதம்தோறும் அரிசி தர கோப்பு அனுப்பியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவித்தனர். டிசம்பர் மாதத்துக்கான அரிசி வரவில்லை” என்றனர்.