புதுவை: 10 நாள் தேசிய புத்தகக் கண்காட்சியை துவக்கி வைத்தார் முதல்வர் - மாணவர்களுக்கு தள்ளுபடியில் விற்பனை


புதுச்சேரி: புதுச்சேரியில் 28வது தேசியப் புத்தகக் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். அனைத்து பதிப்பு புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி தரப்படுகிறது. கல்லூரி, பள்ளிகளுக்கு நூல்கள் வாங்கினார் 25 சதவீதம் தள்ளுபடி தரப்படுகிறது.

28வது தேசியப் புத்தகக் கண்காட்சி, புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தகச் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி, வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் இன்று தொடங்கியது. முதல்வர் ரங்கசாமி கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். அதையடுத்து 28 புதிய நூல்களை வெளியிட்டார். புத்தகக் கண்காட்சிக்குழு சிறப்புத் தலைவர் பேராசிரியர் பாஞ்.இராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், "இன்று முதல் வரும் 22ம் தேதி வரை 10 நாட்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது. குறிப்பாக தமிழகம், புதுச்சேரி எழுத்தாளர்கள் எழுதிய நூல்களுகளும் வெளியிடப்பட்டன. இக்கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி முதலான இந்தியா பகுதிகளிலிருந்து 70 புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில், பல்வேறு மொழிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டு உள்ளன. கண்காட்சியில் புதுச்சேரி எழுத்தாளர்களின் நூல்களுக்கு தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி எழுத்தாளர்களின் 15 நூல்கள் வெளியிடப்படும். கண்காட்சியில் இடம் பெறும் நூல்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரி நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கினால் 25 சதவிதம் தள்ளுபடி தரப்படும். கண்காட்சி காலை 11 முதல் இரவு 8 வரை நடக்கிறது. தினமும் பேச்சு, கவிதைப் போட்டிகள் மாலை 6 மணிக்கு நடக்கும். புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்குவோருக்கு புத்தக நட்சத்திரம் சான்றிதழ்களும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் புத்தகங்கள் வாங்கினால் புக் சூப்பர் ஸ்டார் சான்றிதழும் தரப்படும் என்று தெரிவித்தார்.

x