கரூர்: அமராவதி ஆற்றில் 36,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரூர் மாவட்டத்தில் கரையோரப் பகுதி மக்கள் ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என கரையோரப் பகுதி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் 87.37 அடியாக உள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அமராவதி ஆற்றில் இன்று (டிச.13ம் தேதி) 36,000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதலாக நீர் திறக்க வாய்ப்புள்ளது.
எனவே, அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட எவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்கள் எடுப்பதையோ, முற்றிலும் தவிர்க்குமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்த நிலையிலும் அதனை அலட்சியம் செய்து கரூர் திருமாநிலையூர் அமராவதி ஆற்றினுள் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.