திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்


சென்னை: திண்டுக்கல் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன். தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள அணைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் திருச்சி சாலையில் நான்கு மாடி கட்டிடத்தில் சிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது. நேற்று இரவு கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள மின்சாதனம் வெடித்துச் சிதறி தீப்பற்றியது. தீ மளமளவென மேல்மாடிகளுக்கு பரவியது. மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், உதவியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

திண்டுக்கல் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்குள் வராததால் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இரவு 11 மணி அளவில் தீயை அணைத்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் ஒரு குழந்தை, 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 32 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

x