நீர் வரத்து அதிகரித்து வருவதால் பூண்டி ஏரியிலிருந்து விநாடிக்கு 5000 கன அடி உபரி நீர் திறப்பு


திருவள்ளூர்: மழை​யால் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவ​தால் பூண்டி ஏரியி​லிருந்து உபரி நீர் நேற்று மதியம் முதல் திறக்​கப்​பட்டு வருகிறது. இதனால், கொசஸ்தலை ஆற்றங்​கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. திரு​வள்​ளூர் அருகே உள்ள பூண்டி ஏரி, சென்னைக்கு குடிநீர் வழங்​கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக விளங்​கு​கிறது.

இந்த ஏரியில், கொசஸ்தலை ஆற்றுநீர், பூண்டி ஏரியை ஒட்டி​யுள்ள ஆந்திர மலைப்​பகு​திகள் மற்றும் தமிழக வனப்​பகு​திகள் உள்ளிட்டவை அடங்கிய நீர் பிடிப்பு பகுதி​களில் பெய்​யும் மழைநீர், தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்​தப்​படி, ஆந்திர அரசு வழங்​கும் கிருஷ்ணா நீர் ஆகியவை சேமிக்​கப்​பட்டு, பிறகு கால்​வாய்கள் மூலம் புழல், செம்​பரம்​பாக்​கம், சோழவரம் ஏரிகளுக்கு அனுப்​பப்​பட்டு வருகிறது.

இந்நிலை​யில், சமீபத்​தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழக- ஆந்திர எல்லை பகுதி​களில் பெய்த மழையால் நீர் பிடிப்பு பகுதி​களில் இருந்து மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு ஏற்கெனவே வந்து கொண்​டிருக்​கிறது. இச்சூழலில், நேற்று முன் தினம் முதல் திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் பெய்து வரும் மழையால் பூண்டி ஏரிக்கு நீர்ப்​பிடிப்பு பகுதி​களில் இருந்து வரும் மழை நீரின் அளவு நேற்று காலை முதல் அதிகரித்த வண்ணம் உள்ளது.

நேற்று பகல் 12 மணி நிலவரப்படி, பூண்டி ஏரிக்கு மழை நீர் விநாடிக்கு 3,400 கன அடி வந்து கொண்​டிருந்​தது. மேலும், கிருஷ்ணா நீர், ஆரணி ஆற்று நீர் விநாடிக்கு 460 கன அடி வந்து கொண்​டிருந்​தது. ஆகவே, 3,231 மில்​லியன் கன அடி கொள்​ளளவு மற்றும் 35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 2,914 மில்​லியன் கன அடியாக​வும், நீர் மட்ட உயரம், 34.29 அடியாக​வும் இருந்​தது.

எனவே, பூண்டி ஏரியின் பாது​காப்பு கருதி, முன்னெச்​சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏரியில் நேற்று மதியம் 1.30 மணியள​வில், விநாடிக்கு 1,000 கன அடி உபரி நீரை, நீர்வள ஆதாரத் துறை​யின் கொசஸ்தலை ஆறு வடிநிலக் கோட்ட செயற்​பொறி​யாளர் அருண்​மொழி முன்னிலை​யில், நீர்​வளத் துறை களப்​பணி​யாளர்கள் திறந்​தனர்.

இந்நிகழ்​வில், பூண்டி உதவி பொறி​யாளர் அகிலன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்​றனர். தொடர்ந்து, நீர் வரத்து அதிகரித்து வந்த​தால், நேற்று மாலை 5 மணியள​வில், பூண்டி ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்​கப்​பட்​டது.

பூண்டி ஏரியி​லிருந்து திறக்​கப்​பட்​டுள்ள உபரி நீர், தாமரைப்​பாக்​கம், காரனோடை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சுமார் 65 கிமீ பயணித்து, எண்ணூர் பகுதி​யில் வங்காள விரி​குடா கடலில் கலக்​கும். ஆகவே, பூண்டி ஏரியில் வெளி​யேற்​றப்​படும் உபரி நீர் வெளி​யேறு​வ​தால், ​தாழ்வான பகு​தி​களில் வசிப்​பவர்களுக்கு வெள்ள அபாய எச்​சரிக்கை ​விடுக்​கப்​பட்டுள்ளது. நீர் வரத்து அதிகரித்ததால், நேற்று மாலை நிலவரப்படி, 281 அடி உயரம் கொண்ட பிச்சாட்டூர் அணையின் நீர்மட்டம் 280.80 அடியாக உள்ளது.

ஆகவே, இந்த அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விநாடிக்கு 5,600 கன அடியாக அதிகரித்துள்ளனர் ஆந்திர நீர் வளத் துறை அதிகாரிகள். இதையடுத்து ஆரணி கரையோரம் உள்ள பேரண்டூர், பேரிட்டிவாக்கம், காரணி, புதுவாயல், ஏலியம்பேடு, லட்சுமிபுரம், காட்டூர், ஆண்டார்மடம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

x