புதுச்சேரி: கனமழை எச்சரிக்கை காரணமாக பேரிடர் மீட்புக்குழு புதுச்சேரிக்கு வந்துள்ளது. நிரம்பிய ஏரிகளில் உபரிநீரை உடனே திறந்து விட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார். மேலும், மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் சில தினங்களுக்கு முன்பு ஃபெஞ்சல் புயலால் பெய்த கன மழையின் காரணமாக பல்வேறு ஏரிகள் நீர் நிரம்பியுள்ளது. இந்நிலையிலும் மேலும் பெய்து வரும் மழையை கருத்தில் கொண்டு ஆட்சியர் குலோத்துங்கன் இன்று ஊசுட்டேரி, கனகன் ஏரி, பாகூர் ஏரி, வாதானூர் ஏரி ஆகிய ஏரிகளை பார்வையிட்டார். நீரின் அளவை ஆய்வு மேற்கொண்டார். மேலும் கரைகள் பலமாக உள்ளனவா என்பது குறித்தும் பார்த்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். உபரி நீரை உடனுக்குடன் திறந்து விடும்படியும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் அணைகள் திறப்பால் நீர் வரும் முக்கியப்பகுதியான பத்துகண்ணு மதகு மற்றும் கொம்பந்தான்மேடு தடுப்பணை போன்ற பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டார்கள், மேலும் நீர் நிலைகளை கவனமுடன் கண்காணிக்கும் படியும் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் படியும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்கள். போதுமான அளவு மணல் முட்டைகளை கையிருப்பில் வைத்துக் கொள்ளவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பேரிடர் மீட்புக்குழு வருகை: இச்சூழலில் பேரிடர் மேலாண்மை துறை கேட்டு கொண்டதற்கிணங்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழு புதுவைக்கு வந்துள்ளது. இக்குழுவில் 30 பேர் இடம் பெற்றுள்ளனர். தேவைப்பட்டால் களத்தில் இறங்கி பணியாற்றுவார்கள் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆழ்கடலுக்கு செல்ல தடை: ''மீனவர்கள் ஆழ் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையும் எச்சரித்துள்ளது. புதுவை மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்ட அறிவிப்பில், வெள்ளிக்கிழமை தமிழகம், புதுவையில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
புதுவை மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். புதுவை கடற்பகுதியில் பாதுகாப்பாக மீன்பிடி தொழிலை மேற்கொள்ளவும். இந்த வானிலை அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்படும். மீனவர்கள் தொடர்ந்து வானிலை எச்சரிக்கைகளை கவனிக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.