புதுச்சேரி: புதுச்சேரி அதிகாரிகள் சேத மதிப்பு அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்ப காலதாமதம் ஆகிவிட்டது. இதனால் முதல்கட்ட நிவாரணம் உடனடியாக கிடைக்கவில்லை. குறிப்பாக உள்ளூர் அதிகாரிகள் அரசுக்கு எதிராகவும், மெத்தனபோக்குடனும் செயல்படுகின்றனர் என்று பேரவைத் தலைவர் செல்வம் குற்றம் சாட்டினார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: எனது தொகுதியான மணவெளியில் உள்ள சின்ன வீராம்பட்டினத்தில் அரசு ஆரம்ப பள்ளி கட்டிடம் சிதிலமடைந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த கடல்வாழ் மற்றும் உள்நாட்டு மீனவர்கள் இணைந்து, என்னை சந்தித்து பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித் தரும்படி கோரிக்கை வைத்தனர்.
அதன்படி புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுத்தேன். கடந்த 14.9.2024 அன்று கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டது. இதில் புதிய கட்டிடம் கட்டிய பிறகு மீண்டும் பள்ளி அங்கு இடமாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2 முறை முதல்வராகவும் தற்போது எம்.பி.யாகவும் பொறுப்பு மிக்க பதவியில் உள்ள வைத்திலிங்கம் பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு, ரெஸ்டோபார் அமைக்க அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இது தவறான தகவல்.
அரசு கட்டிடத்தில் ரெஸ்டோ பார் அமைக்க முடியுமா? இதை அவர்தான் விளக்க வேண்டும். கடந்த 30-ம் தேதி ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடூர், சாத்தனூர் அணைகள் திறக்கப்பட்டதால் ஆற்றங்கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. மத்தியக்குழு பார்வையிட்டு சேத மதிப்பை கணக்கிட வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசும் உடனடியாக குழுவை அனுப்பியுள்ளது. அவர்கள் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். இதனிடையே புயலில் பாதித்த மக்களை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறியுள்ளனர். முதல்வர் உரிய நிவாரணம் அறிவித்துள்ளார்.
அந்த நிவாரணத்தில் முதல்கட்டமாக அனைத்து ரேஷன் கார்டுக்கும் ரூ.5 ஆயிரம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புயல் நிவாரணம் வழங்காத நிலையில் புதுச்சேரியில் நிவாரணத்தை வழங்கியுள்ளோம்.
நாடாளுமன்றத்தில் புதுச்சேரியை தாக்கிய புயல் பாதிப்பு குறித்து வைத்திலிங்கம் என்ன பேசினார்? - மத்திய குழுவிடம் அனைத்து கட்சிகளும் மனு அளித்தனர். ஆனால் காங்கிரஸார் இப்போதுதான் ஆளுநரை சந்தித்து மனு கொடுக்கின்றனர். புதுச்சேரி அதிகாரிகள் சேத மதிப்பு அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்ப காலதாமதம் ஆகிவிட்டது. இதனால் முதல்கட்ட நிவாரணம் உடனடியாக கிடைக்கவில்லை.
இருப்பினும் மத்திய அரசு நிவாரணம் வழங்கும். அரசு அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனப்போக்குடன் செயல்படுகின்றனர் என குற்றம்சாட்டுகிறோம். ஒரு சில அதிகாரிகள் இதை மாற்றிக் கொண்டாலும், ஒரு சிலர் இதை தொடர்கின்றனர். அவர்களை முதல்வர் கருணையோடு மன்னித்து வருகிறார். இதே நிலை தொடர்ந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம். கோப்புகளுக்கு ஒரு வாரத்தில் முடிவெடுக்க ஆளுநர் ஆணை பிறப்பித்துள்ளார். ஆனாலும், அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனர். அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் தங்களை திருத்திக்கொண்டு, புதுச்சேரி மக்களுக்காக கோரப்படும் கோப்புகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். குறிப்பாக உள்ளூர் அதிகாரிகள்தான் அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர். மக்கள் பணிகள் பாதிக்கப்படுகின்றன.
ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை புதுச்சேரிக்கு பாஜக எம்எல்ஏக்கள் அழைத்து வருவது பற்றி கேட்கிறீர்கள். வெளியூர்காரர்களை புதுச்சேரி மக்கள் ஏற்க மாட்டார்கள். மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்றார்.