திருப்பத்தூர் ஊராட்சி தலைவர் கைது: கொட்டும் மழையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்


திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ஊராட்சி அலுவலகம் திறப்பு நாளில் ஊராட்சி மன்ற தலைவரை போலீஸார் கைது செய்தனர். இதை கண்டித்து கொட்டும் மழையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இளங்குடி ஊராட்சி அலுவலக கட்டிடம் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்களாகியும் கட்டிடத்தை திறக்கவில்லை. அலுவலகத்தை திறக்க தொகுதி எம்எல்ஏ-வும், அமைச்சருமான கேஆர் பெரியகருப்பன் மற்றும் அதிகரிகளிடம் வலியுறுத்தியும் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து ஊராட்சித் தலைவர் நேசம் ஜோசப் பொது மக்கள் முன்னிலையில் இன்று காலை ஊராட்சி அலுவலகத்தை திறக்க ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு ஊராட்சித் தலைவரை வீட்டுக்குள் புகுந்து போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவரை விடுவிக்க வலியுறுத்தி கிராம மக்கள் கொட்டும் மழையிலும் நாச்சியாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, வேறு வழியின்றி காவல் நிலையத்தை போலீஸார் மூடினர். எனினும் கிராம் மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். பின்னர் ஊராட்சித் தலைவரை போலீஸார் விடுவித்தனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், 2022ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் கைது செய்ததாகவும், பின்னர் விடுவித்ததாகவும் கூறியுள்ளனர்.

x