ஸ்ரீவில்லிபுத்தூர்: கனமழை எச்சரிக்கை காரணமாக கார்த்திகை மாத பவுர்ணமி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் அறிவித்துள்ளார்.
ஶ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு பின் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி என மாதத்தில் 8 நாட்கள் மட்டும் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சதுரகிரியில் டிசம்பர் 13 முதல் 16ம் தேதி வரை கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் செய்து வந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு வானிலை மையம் டிசம்பர் 12ம் தேதி முதல் கன மழை பெய்யும் என அறிவித்துள்ளதாலும், தாணிப் பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், டிசம்பர் 13 முதல் 16ம் தேதி வரை கார்த்திகை மாத பிரதோசம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்கு சதுரகிாி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜ் கூறியுள்ளார்.