சென்னை: சசிகலாவுக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் எதிரிகள் பட்டியலில் தன்னுடைய பெயரை முதல் எதிரியாக மாற்றியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வு, வழக்கு பட்டியலில் முதல் எதிரியாக மாற்றியதால் விசாரணையில் எந்த பாதிப்பும் இல்லை என கூறி சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும், நிறுவனத்தின் மீதான குற்றத்திற்கு அனைத்து முடிவுகளையும் எடுக்கும் நிறுவனம் தான் முழு பொறுப்பு. இதில் நிறுவனத்தின் இயக்குநர் என்ற அடிப்படையில் சசிகலா உட்பட 3 பேருக்கும் பொறுப்பு உள்ளது. அதனால், விசாரணையை தவிர்க்க கோர முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் உத்தரவிட்டனர்.