புதுச்சேரியில் அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு கேட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்


இயக்குநர் விக்னேஷ் சிவன் | கோப்புப் படம்

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரிடம் அரசு ஹோட்டலை விலைக்கு கேட்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.

புதுச்சேரியில் பல்வேறு சினிமா படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தற்போது உயர்த்தப்பட்ட ஷூட்டிங் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி களை நடத்துவதற்கு இயக்குனரும் நடிகை நயன்தாரா கணவருமான விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளார். இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

அதன்படி நேற்று இரவு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்திக்க சட்டப்பேரவைக்கு, இயக்குனர் விக்னேஷ் சிவன், ஷூட்டிங் சைட் மேனஜர் குமரன் ஆகியோர் வந்துள்ளனர். அப்போது அவர் இல்லாததால், சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து பேசியுள்ளார். அப்போது வார இறுதி நாட்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு இடம் தேவை என கூறியதாக தெரிகிறது. பழைய துறைமுக வளாகத்தில் புதிதாக அரங்கம் கட்டப்பட்டுள்ளது, அங்கு வேண்டுமானால் நடத்திக்கொள்ளலாம். அதற்கான ஜிஎஸ்டியுடன் கூடிய கட்டண விபரங்களை அமைச்சர் கூறியதாக கூறப்படுகிறது.

அப்போது, கடற்கரையோரம் உள்ள சீகல்ஸ் ஓட்டல் (அரசு கட்டிடம்) பார்க்க நன்றாக இருக்கிறது. அதனை விலைக்கு கொடுக்கலாமே என இயக்குனர் விக்னேஷ் சிவன் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அமைச்சர், அது அரசு கட்டிடம், அங்கு சுற்றுலாத் துறை ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். தெரிந்துதான் கேட்கிறீர்களா? என அமைச்சர் கேட்டுள்ளார். நிகழ்ச்சி நடத்துவதற்கு வேறு இடம் காட்டுகிறோம், போய் பாருங்கள் எனக்கூறிவிட்டு அமைச்சர் அந்த இடத்தில் இருந்து சென்றதாக கூறப்படுகிறது.

x